மழைநீர் கட்டமைப்பில் தண்ணீர் சேமிப்பு

1 month ago 7

 

கோவை, அக்.14: கோவை மாவட்டத்தில் கடந்த 2002ம் ஆண்டில் மழை நீர் சேகரிப்பு திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அரசு, தனியார் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு தொட்டி கட்ட வேண்டும். கல், மணல், வடிப்பான் என மூன்று நிலையில் நீர் சேகரித்து தெளிந்த நீரை தொட்டி அல்லது நிலத்தில் சேகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மழை காலங்களில் கட்டடங்களின் மொட்டை மாடியில் தேங்கும் மழை நீரை வடிகட்டி, நிலத்தடி நீர் தொட்டியில் சேகரிக்கலாம். மழை நீரை பயனுள்ள வகையில் சேகரிக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த திட்டம் துவக்கப்பட்டது. மாவட்ட அளவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டது.

உள்ளாட்சிகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டினால் மட்டுமே கட்டட அனுமதி வழங்கப்படும், சொத்து வரி, குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என உள்ளாட்சி நிர்வாகங்கள் தெரிவித்தது. மழை நீர் தொட்டி கட்டமைப்பு குறித்த வரைபடமும், ஆதாரமும் கேட்கப்படுகிறது. மாவட்ட அளவில் கடந்த 5 ஆண்டில் மேலும் சுமார் 10 லட்சம் கட்டுமானங்களில் மழை நீர் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மொத்த கட்டமைப்புகளில் 100க்கு 5 வீடுகளில் கூட மழை நீர் கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை.

மழை காலங்களில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் மழை நீர் சாக்கடையில் வீணாகி வருகிறது. இதை உள்ளாட்சி நிர்வாகங்கள் ஆய்வு செய்யவும், மழை நீர் கட்டமைப்பு உருவாக்கவும் முயற்சி எடுக்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.இது குறித்து பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவினர் கூறுகையில்,‘‘மாவட்ட அளவில் மழை நீர் சேகரிப்பு திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கட்டடம், காலியிடங்களுக்கு ஏற்ப மழை நீர் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. அரசு கட்டடடங்களில் 100 சதுரடிக்கு அதிகமாக மழை நீர் கட்டமைப்பு உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு, அரசு சார்பு கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக பயன்பாட்டில் உள்ளதா என ஆய்வு செய்யப்படும். தனியார் கட்டடங்களில் மழை நீர் தொட்டி கட்டினால் மட்டுமே வரி விதிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை நீர் கட்டமைப்பு தொடர்பாக அடிக்கடி ஆய்வு நடத்தப்படும்’’ என்றனர்.

The post மழைநீர் கட்டமைப்பில் தண்ணீர் சேமிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article