*உயரமான இடத்திற்கு மாற்ற கோரிக்கை
ஊட்டி : ஊட்டியில் பெய்து வரும் மழை காரணமாக ரயில்வே காவல் நிலையத்திற்குள் மழை நீர் புகுவது தொடர் கதையாக உள்ளதால் போலீசார் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் காவல் நிலையத்தை உயரமான இடத்திற்கு மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது நீலகிரி மாவட்டத்தில் மலை ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
1899-ம் ஆண்டு மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. அதன்பின்னர் 1908ம் ஆண்டு ஊட்டி வரை இந்த ரயில் பாதை நீட்டிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை மலை ரயில் போக்குவரத்து தொய்வின்றி இயங்கி வருகிறது. பழமையான இந்த நீலகிரி மலை ரயிலுக்கு கடந்த 2005ம் ஆண்டு யுனஸ்கோ அமைப்பு பாரம்பரிய அந்தஸ்த்தை வழங்கியது.
இயற்கை சூழலுடன் வனங்களுக்கு நடுவே செல்லும் மலை ரயிலில் பயணிக்க ஊட்டி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் சீசன் சமயங்களில் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணித்து மகிழ்கின்றனர்.
ஊட்டியில் பழமை வாய்ந்த கட்டிடத்தில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்கு என தமிழக காவல்துறையின் ரயில்வே காவல் நிலையம் படகு இல்ல சாலையோரத்தில் தென்னக ரயில்வேக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ஊட்டியில் ரயில் சேவை துவங்கப்பட்ட காலம் முதல் காவல் நிலையம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போதும், கோடை காலத்தில் பெய்யக்கூடிய கனமழையின் போதும் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள ரயில்வே காவல் நிலையத்திற்குள் மழைநீர் புகுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் மழை காலம் என்றாலே இங்கு பணியாற்றும் காவலர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடந்த 15ம் தேதி முதல் ஊட்டியில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி ஊட்டி நகரில் தாழ்வாக உள்ள சேரிங்கிராஸ், கூட்ஷெட் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி விடுகிறது.
கோடப்பமந்து கால்வாயில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் படகு இல்ல சாலையில் ரயில்வே பாலத்திற்கு அடியில் மழைநீர் தேங்குகிறது. மேலும் கழிவுநீர் மழை நீருடன் கலந்து தாழ்வான பகுதியில் அமைந்துள்ள ரயில்வே காவல் நிலையத்திற்குள் மழைநீர் புகுந்து விடுகிறது.
இதனால் காவலர்கள் உள்ளே சென்று பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. ரயில்வே காவல் நிலைய கட்டிடத்தை மேடான பகுதிக்கு மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் நிலையில், ரயில்வே நிர்வாகம் கண்டு கொண்டதாக தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், ‘‘கடந்த பல ஆண்டுகளாகவே ஒவ்வொரு மழை காலங்களிலும் கோடப்பமந்து கால்வாயில் பெருகெடுத்து ஓடும் மழைநீர், காவல் நிலையத்திற்குள் புகுந்து விடுகிறது.
கழிவு நீருடன் புகுவதால் பெரும் அவதிக்குள்ளாகிறோம். கழிவு நீருடன் சேர்ந்து மழைநீர் புகுவதால் நோய் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. எங்களுடைய வாகனங்கள் மட்டுமின்றி ஆவணங்களையும் பாதுகாப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மழை நின்ற பின்னர், நீரை வெளியேற்றுவதற்குள் படாத பாடுபட்டு விடுகிறோம்.
கடந்த பல ஆண்டுகளாவே மழைநீர் புகுந்து கட்டிடமும் வலுவிழந்து காணப்படுகிறது. வேறு இடத்திற்கு மாற்றி தர வேண்டும் என அண்மையில் ஆய்வு மேற்கொண்ட சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் உள்ளிட்டோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாற்றி தரப்படும் என தெரிவித்தும், பல மாதங்களான நிலையில் மாற்றப்படாமல் உள்ளது. இந்த சூழலில் தற்போது பெய்து வரும் கோடை மழையால் நீர் புகுந்து வருகிறது. வரும் மாதம் தென்மேற்கு பருவமழையும் துவங்க உள்ளது. எனவே போலீசார் நலன் கருதி ரயில்வே காவல் நிலையத்தை உயரமான இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்’’ என்றனர்.
The post மழைநீர் அடிக்கடி புகும் அவலம் ஊட்டி ரயில்வே காவல் நிலைய போலீசார் அவதி appeared first on Dinakaran.