சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (19.05.2025) தலைமைச் செயலகத்தில் தென்மேற்கு பருவமழையையொட்டி மாநிலத்தில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தென்மேற்குப் பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை திறம்பட எதிர்கொள்ள, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும், மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுவதையும், தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டையும், மீட்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களின் தயார் நிலையையும் உறுதி செய்திடவேண்டும் என்றும், வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அரசு அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் சமீபகாலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டால் பேரிடர் காலங்களில் ஏற்படுகின்ற பல பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள், நீர் வழிகால்வாய்கள் மற்றும் குளங்கள் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் தூர்வாருதல் ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், பருவமழை காலத்துக்குத் தேவையான எல்லா ஆயத்த நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் (20.5.2025) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் உள்ள கால்வாயில் ஆகாயத்தாமரையை அகற்றும் பணி, டெமல்லஸ் சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி, ஓட்டேரி நல்லா கால்வாயை மேம்படுத்தும் பணி மற்றும் ஓட்டேரி மெட்ரோ இரயில் நிலையக் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி வால்டாக்ஸ் சாலை, கல்யாணபுரம் பகுதியில் நீர்வளத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 17.3 கி.மீ நீளம் கொண்ட பக்கிங்காம் கால்வாயில் ரோபோட்டிக் எக்ஸ்வேட்டர் வாகனம் மூலம் ஆகாயத்தாமரை அகற்றும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, வி.க. நகர் மண்டலம், டெமல்லஸ் சாலைப் பகுதியில் 17.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த மழைநீர் வடிகாலானது, முனுசாமி கால்வாயில் இருந்து பக்கிங்காம் கால்வாயினை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் வார்டு 73, 76 மற்றும் 77-க்கு உட்பட்ட அங்காளம்மன் கோவில் தெரு, ராஜா தோட்டம் பழைய ஆடு தொட்டி சாலை, கே.எம். கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்படும்.
தொடர்ந்து, வி.க. நகர் மண்டலம், ஓட்டேரியில் 10.3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஓட்டேரி நல்லா கால்வாயில் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், புதிய தடுப்பு சுவர் அமைத்தல், தடுப்பு சுவற்றின் மேல் வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஒவ்வொன்றும் 3.3 மீ அகலமும் 1.7 மீ உயரமும் கொண்ட இரண்டு நீர் போக்கு வழி பகுதிகள் கொண்ட ஓட்டேரி நல்லா கால்வாயில், மெட்ரோ இரயில் பணிகளுக்காக ஒரு நீர்போக்கு வழி பகுதி தற்காலிகமாக அடைக்கப்பட்டு, மற்றொரு நீர்போக்கு வழி பகுதியில் மழைநீர் தடையில்லாமல் வெளியேற வகை செய்யப்பட்டுள்ளது. பருவ மழை தொடங்கும் முன்னர் இரு நீர்போக்கு வழி பகுதியிலும் மழைநீர் வெளியேறும் வகையில் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
பின்னர், மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஓட்டேரி மெட்ரோ இரயில் நிலையக் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அனைத்து வெள்ளத் தடுப்பு பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களை கொண்டு அப்பணிகள் அனைத்தையும் விரைவில் முடிக்க வேண்டுமென்று முதலமைச்சர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) வ. சிவகிருஷ்ணமூர்த்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post தென்மேற்கு பருவமழை – வெள்ளத் தடுப்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் appeared first on Dinakaran.