மழை இடைவிடாது பெய்வதால் தொடர்ந்து களத்தில் நின்று மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவிட வேண்டும்: திமுக இளைஞர் அணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

3 months ago 13

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திமுக தலைவர்- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சீரிய முறையில் மேற்கொண்டுள்ள நிலையில், அவற்றைத் தொடர்ந்து கண்காணித்தும் வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், நான், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் களத்தில் இறங்கி மழைப் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்கின்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

மழைநீர் வடிவதை உறுதிசெய்வது, தற்காலிகத் தங்குமிடங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வது உணவு, பால் பிரெட் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவது என இப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், திமுகவின் முதன்மையான அணியான திமுக இளைஞர் அணி சார்பிலும் நம் நிர்வாகிகள் பல்வேறு நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருவதை நான் அறிவேன். மழை இடைவிடாது பெய்வதாலும், வானிலை எச்சரிக்கை தொடர்வதாலும், தொடர்ந்து களத்தில் நின்று மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவிட வேண்டிய பொறுப்பு இளைஞர் அணியின் ஒவ்வொரு நிர்வாகிக்கும் – உறுப்பினர்களுக்கும் உள்ளது.

ஆகவே, மழைக்கால நிவாரணப் பணிகளை மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர,பகுதி-பேரூர்-வார்டு, ஊர்க்கிளை அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் இன்னும் வேகத்துடன் முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களிடம் இருந்து வருகிற கோரிக்கைகளை திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து நிறைவேற்றித் தரும் பணியை இளைஞர் அணியினர் செய்து கொடுக்கலாம். அதேபோல, அரசுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாகச் செயல்படுவது அவசியம். மேலும், தமிழ்நாடெங்கும் தன்னார்வலர்கள் மழைக்கால நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு நம் இளைஞரணியினர் துணைநின்று வேண்டிய உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

The post மழை இடைவிடாது பெய்வதால் தொடர்ந்து களத்தில் நின்று மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவிட வேண்டும்: திமுக இளைஞர் அணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Read Entire Article