மலையாள திரையுலகினர் ஸ்டிரைக் அறிவிப்பு

3 hours ago 2

கொச்சி,

கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், கேரள திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம், கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு மலையாள திரைப்படத் துறை அமைப்புகள் சார்ந்த ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மலையாள சினிமா சந்தித்து வரும் நிதி இழப்பு, கதாநாயகர்களின் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது. இறுதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கேரள திரைப்பட அவைத் தலைவர் சுரேஷ் குமார் பேசுகையில், "கேளிக்கை வரியை மாநில அரசு இரட்டிப்பு செய்தது, சினிமா டிக்கெட்டுக்களுக்கு ஜி.எஸ்.டி., வரி விதித்தது உள்ளிட்ட காரணங்கள் தயாரிப்பாளர்களுக்கு பெரும் சிரமத்தை உருவாக்கியுள்ளது. வரி குறைப்பு தொடர்பாக கேரள அரசிடம் பலமுறை வலியுறுத்தியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், ஜுன் 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இயக்குநர்களின் சம்பளம் அதிகமாக உள்ளது. மேலும் அனைத்து படமும் ஓ.டி.டிக்கு விற்கப்படுவதில்லை. ஒரு படத்தைத் தயாரிப்பதற்கும், படத்தை வினியோகம் செய்வதற்கும் அதிக செலவு ஏற்படுகிறது. தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகளை நிராகரிக்கும் நடிகர்கள் தயாரிக்கும் படங்களை வெளியிடுவதை தடுக்க நடவடிக்கை எடுப்போம். தேவைப்பட்டால், அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் விபரங்களையும் வெளியிடுவோம். மேலும், தங்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வருடன் மீண்டும் ஒருமுறை சந்தித்து பேசுவோம் " என கூறினார்.

ஜனவரி மாதத்தில் மட்டும் கேரள சினிமாவுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article