மலையாள திரைத்துறையில் பாலியல் சர்ச்சை: மேக்கப் உதவியாளர் கைது

2 months ago 13

திருவனந்தபுரம்,

கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. அந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

சிறப்பு விசாரணை குழுவிடம் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் இதுவரை 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்து பெண் மேக்கப் கலைஞர் ஒருவர் சிறப்பு விசாரணை குழுவிடம் அளித்த புகாரின்பேரில், கொச்சி இன்போபார்க் போலீசார், மேக்கப் உதவியாளர் சாருத் சந்திரன் என்பவரை கைது செய்துள்ளனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 354ஏ மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article