டேராடூன்,
இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்தந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் உள்ளன. தனி நபர் தான் பின்பற்றும் மதத்திற்கு ஏற்றார்போல் சிவில் சட்டங்கள் உள்ளன.
அதேவேளை, நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல், பொது சிவில் சட்டத்திற்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது.
தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு உத்தரகாண்ட் சட்டசபையில் பொதுசிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொதுசிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.