ராமநாதபுரம்,
நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி என்ற பாப்பா கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் காலமானார். இந்நிலையில் தாயாரின் 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் வடிவேலு நேற்று காலை ராமநாதபுரம் அருகே உள்ள சேதுக்கரை கடலில் புனித நீராடி தாயாருக்கு தர்ப்பணம் கொடுத்தார். தொடர்ந்து சேதுக்கரை ஆஞ்சநேயர் கோவிலில் சாமி கும்பிட்டார். அதைத்தொடர்ந்து திருப்புல்லாணி கோவிலில் தரிசனம் செய்தார்.
அப்போது நடிகர் வடிவேலு கூறியதாவது:- பொதுமக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 2 புதிய படங்களில் நடித்து வருகிறேன். விரைவில் அவை வெளிவர உள்ளன. இந்த உலகத்தில் இறைவனுக்கு நிகரான ஒருவர் தாயார் தான்.
எப்போதும் என் அம்மாவை நினைத்துக்கொண்டே இருப்பேன். அம்மா இறந்த துக்கம் என்னை விட்டு இன்னும் போகவில்லை. எனது அம்மாவை என்றும் மறக்க முடியவில்லை. எனது அம்மாவின் 2-ம் ஆண்டு திதியை முன்னிட்டு சேதுக்கரை கடற்கரையில் வழிபாடு செய்வதற்காக வந்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதன் பின்னர் அவர் ராமநாதபுரம் புறப்பட்டுச் சென்றார்.