
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த 'விண்ணைதாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து 'பானா காத்தாடி, நீதானே பொன் வசந்தம், அஞ்சான்' என பல படங்களில் நடித்து பிரபலமானார்.அதனை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் சமந்தா. ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கிடைக்காமலே இருந்தது. அந்த சமயத்தில் 2014-ம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து, விஜய்யுடன் இணைந்து 'தெறி, மெர்சல்' என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
கடைசியாக தமிழ் சினிமாவில் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். இந்த 2 படங்களுமெ போதுமான ரீச் கொடுக்கவில்லை. அப்பாவின் மறைவு, மயோசிடிஸ் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். 'மா இண்டி பங்காரம்' என்ற தெலுங்கு சினிமாவின் மூலமாக ரீ எண்ட்ரி கொடுக்கும் சமந்தா இந்தப் படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் பிரபல நிறுவனத்துக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், "நான் 20 வயதில் இந்தத் துறையில் நுழைந்தேன். அப்போது என்னுடைய எண்ணமெல்லாம், எத்தனை பிராண்டுகள் நம்மை அணுகி, நம் முகத்தை அவர்களின் பிராண்டுக்காக தேர்வு செய்கிறார்கள் என்பதில்தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது என நினைத்தேன். பெரிய பன்னாட்டு பிராண்டுகள் அனைத்தும் என்னை தங்கள் பிராண்ட் தூதராக விரும்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.ஆனால், இப்போது நான் தவறான பொருள்களை தேர்வு செய்து, தவறான உதாரணமாக முடியாது. ஆம், அந்த சிறு வயது முட்டாள்தானமாக செயல்பட்ட சமாந்தாவிடம் இந்த சமந்தா மன்னிப்புக் கேட்க வேண்டும். என் தேர்வுகள் குறித்து நான் சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
எனக்கு சரியானது எனத் தோன்றுவதைதான் பின்பற்ற வேண்டும். அதனால், இப்போது நான் ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு பிராண்ட் குறித்தும் மருத்துவ ஆலோசனைகளை மேற்கொள்கிறேன். அதில் மருத்துவர்கள் கொடுக்கும் அறிவுரையின் அடிப்படையில் ஒப்புகொள்கிறேன்.இளம் வயதிலிருந்து என்னைப் பின்பற்றுபவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வெற்றி என்பது எப்படியும் நம்மை வந்து சேரும். அதற்காக தவறான முன்னுதாரணங்களை அமைத்துவிடக் கூடாது.கடந்த வருடம் நான் கிட்டத்தட்ட 15 பிராண்டுகளை வேண்டாம் என்று சொல்லி விட்டுவிட்டேன். அதனால் கோடிக்கணக்கானப் பணத்தை இழந்துவிட்டேன். அதனால் எனக்கு எந்த வருத்தமுமில்லை. ஏனெனில் மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்கவே விரும்புகிறேன்" என்றார்.