சென்னை: 34 அரசு ஊழியர்களின் பதவி உயர்வு ஆணைகளை வழங்கி, அரசு அறிவிப்புகளை விரைந்து முடிக்க அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர் அலுவலக மாநாட்டுக் கூட்ட அரங்கத்தில் 15.05.2025 அன்று, 34 அரசு ஊழியர்களின் பதவி உயர்வு ஆணைகளை வழங்கி, அரசு அறிவிப்புகளை விரைந்து முடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், கால்நடை பராமரிப்புத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் கால்நடை பராமரிப்புத்துறையின் வாயிலாக, கால்நடைகளின் நலனை காக்கவும், விவசாயிகளின் வருமானம் பெருக்கும் நோக்கத்தோடும், செயல்படுத்தப்பட்டு வரும் துறையின் முக்கிய நடவடிக்கைகள், திட்டங்கள், உட்கட்டமைப்புகள், பண்ணைகள் குறித்த செயல்பாடுகள் மற்றும் துறையின் இதர பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் அவர்கள் மாவட்டம் வாரியாக “முதல்வரின் முகவரி துறை” கீழ் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள மனுக்களின் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். அமைச்சர் அவர்கள் கிராமப்புற கால்நடை விவசாயிகளுக்கு சிறந்த முறையில் கால்நடை மருத்துவம் மேற்கொள்ளும் நோக்கத்தோடு, துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார். மேலும், கால்நடைகளை நோய்களில் இருந்து காத்திட மேற்கொள்ளப்படும் அனைத்து தடுப்பூசிப் பணிகளையும் தங்கு தடையின்றி செயல்படுத்திட அறிவுரை வழங்கினார்.
அமைச்சர் அவர்கள் பசுந்தீவனம் ஆண்டு முழுவதும் கிடைக்கும் நோக்கில், பசுந்தீவன உற்பத்தியை அதிகரித்திட செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை குறித்து ஆய்வு மேற்கொண்டு, கிராமப்புற நிலமற்ற விவசாயிகளின் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் ஆண்டு முழுவதும் கிடைத்திட வலியுறுத்தினார். மேலும், துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கால்நடை பண்ணைகளின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, இப்பண்ணைகள் வாயிலாக கிராமபுற கால்நடை விவசாயிகள் பயன்பெற ஏதுவாக பண்ணைகள் செயலாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் அவர்கள், கிடேரி கன்றுகள் பிறப்பினை அதிகரிக்கும் நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டு வரும் பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து செயற்கை முறை கருவூட்டலின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வருடத்திற்கு ஒரு கன்று எனும் இலக்கினை அடைவது குறித்து கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிறந்த கால்நடை பராமரிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாடு மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
அமைச்சர் அவர்கள், கால்நடை மருத்துவ சேவைகள் கிடைக்காத தொலைதூர கிராமப்புற பகுதிகளில் கால்நடை மருத்துவ சேவைகளை வழங்கும் பொருட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அனைத்து ஊர்திகளும் ஆண்டு முழுவதும் சேவைகள் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இவ்வாய்வு கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு செயலாளர் மரு.ந.சுப்பையன், இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர், இரா.கண்ணன் இ.ஆ.ப., துறையின் கூடுதல் இயக்குநர்கள், மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மருத்துவப்பணிகளுக்கான 34 அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கினார் அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன்..!! appeared first on Dinakaran.