நெல்லை,
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டத்தின் சில இடங்களில் வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது தொடர்பாக விரிவான அறிக்கை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் அளிக்கப்பட்டு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக (Suomotu) எடுத்த வழக்கிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக விரிவான விவரங்கள் அளிக்கப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக இது போன்ற நிகழ்வுகள் நடந்து வருவதால் எங்கிருந்து கழிவுகள் வருகின்றதோ அவர்களையே பொறுப்பாளியாக ஆக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் O.S.312 of 2024 நாள் 19:12.2024 அன்று வழங்கிய தீர்ப்புரையில் கேரளா மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் மேற்படி கொட்டப்பட்ட கழிவுகளை எடுத்து கேரள மாநிலத்திற்கே கொண்டு செல்ல வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கழிவுகளை அகற்றும் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
மேற்படி தீர்ப்பாய உத்தரவை தொடர்ந்து, கேரள மாநில அலுவலர்கள் குழு இன்று வருகை புரிந்து கழிவுகள் கொட்டப்பட்டிருந்த இடங்களில் ஆய்வு செய்தனர்.
கழிவுகள் கொட்டப்பட்ட அனைத்து பகுதிகளும் முழுமையாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளது. இவ்விடங்களில் நோய் பரவலை தடுக்க கிருமி நாசினி உள்ளிட்டவை தெளிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட இடங்களில் கேரள அலுவலர்கள் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்கு பின்னர் கேரள மாநில மாசுகட்டுப்பாட்டு வாரிய குழுவினர் மாவட்ட கலெக்டரை சந்தித்தனர். அப்போது தங்கள் ஆய்வு தொடர்பான அறிக்கையை கேரள அரசிடம் சமர்ப்பிப்பதாகவும், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவின்படி, கேரள அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.
இந்நேர்வில் மருத்துவக் கழிவுகளை கழிவு மேலாண்மை நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக கூறப்படுவதன் மெய்த்தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்; ஒருவேளை ஒப்படைத்திருந்தாலும் அவை முறையாக கையாளப்படுவதை உறுதி செய்யாதது ஏன் என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; நிறுவனத்திடம் ஒப்படைத்தது உண்மை எனில் அவை எப்படி அனுப்பப்பட்டன? அனுப்பியது யார்? வந்து கொட்டியது யார்? என்பது குறித்து ஆய்வு செய்திட வேண்டும்; கழிவுகள் எந்த பிரச்சனையும் இல்லாதவை என்றால் அவற்றை இடைத்தரகர்களை அமர்த்தி இவ்வளவு தொகை செலவு செய்து இங்கு கொண்டு கொட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனவே இவை ஆபத்தானதாகவே கருதி இவ்விவகாரம் குறித்து தீர விசாரித்திட வேண்டும். இது போன்ற செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கு பேராபத்தை ஏற்படுத்த கூடியவை என்பதாலும் நீர்வளம் மற்றும் நில வளத்தை பாதித்து சுற்றுசூழலை சீர்கெடுக்க கூடியவை என்பதாலும் இனிவரும் காலங்களில் எக்காரணம் கொண்டும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் கேரள அலுவலர் குழுவினரிடம் வலியுறுத்தினார்.
அரசின் அறிவுரைப்படி இது போன்ற நேர்வுகளில் இரு மாநில எல்லையோர மாவட்டங்கள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஒருங்கிணைந்து குற்றங்களை தடுப்பது குறித்தும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கழிவுகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி அவற்றை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுத்திடுமாறு கேரள குழுவினரிடம் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.