திருப்பூர், மே 15: திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மையங்களை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு அடிப்படை சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சேவைகளை வழங்கும் திட்டமாக நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் தொடங்கப்பட்டது. இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு சுகாதாரம், நோய்கள் மற்றும் அதன் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் மற்றும் பிற நோய்களைத் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை, ஊட்டச்சத்து ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கங்கள் அமைக்கப்படும் என கடந்த 2022ம் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து பகுதி மக்களுக்கும் தேவையான மருத்துவ வசதியை உறுதி செய்ய முடியும் என கூறப்பட்டது. மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களின் கீழ் செயல்படும் ஒவ்வொரு மையத்திலும் மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், துணை பணியாளர் வீதம் 5 பேர் கொண்ட குழுவினர் பணிபுரிவர். காலை 8 முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 2023 ஜூன் மாதம் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கங்களை முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திருப்பூர் மாநகராட்சியில் 25 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கப்பட்டன. மேலும் தாராபுரம் நகராட்சி அனுமந்தபுரம், உடுமலை நகராட்சி ராமசாமி நகர் என மொத்தம் 27 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா ரூ.25 லட்சத்தில் மொத்தம் ரூ.6.75 கோடி மதிப்பில் கட்டப்பட்டன. இதில் பல இடங்களில் இன்னும் திறக்கபடாமலும், திறந்து வைத்த இடங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வராமலும் உள்ளன. திருப்பூர் மாநகராட்சியில் தோட்டத்துப்பாளையம், குருவாயூர்யப்பன் நகர், அவிநாசி கவுண்டம்பாளையம், தியாகி பழனிச்சாமி நகர், பாண்டியன் நகர், நல்லூர் உட்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நகர்புற நல வாழ்வு மையங்கள் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளன.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘சிட்டி கார்டன் தோட்டத்தப்பளையம் பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகரப்புற நல வாழ்வு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். ஆனால் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இங்கு வடமாநில தொழிலாளர்களும் பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வரக்கூடிய நிலையில் நகர்ப்புற நல வாழ்வு மையம் துவங்கப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் கட்டிடம் மட்டுமே கட்டப்பட்டு முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாத நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.
இங்கிருந்து ஏதேனும் சிறிய முதல் உதவி சிகிச்சைக்கு கூட பல கிலோ மீட்டர் கடந்து திருப்பூர் தெற்கு பகுதியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’’ என வலியுறுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற குழு தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘‘மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த திருப்பூர் மாநகராட்சிக்கு நகரப்புற நல வாழ்வு மையங்கள் அவசியமான ஒன்று. பல்வேறு பகுதிகளில் நல வாழ்வு மையங்கள் கட்டப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அவைகளில் பெரும்பாலும் இன்னும் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனை விரைவில் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என மாமன்ற கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மக்கள் தேவையை பொறுத்து உடனடியாக நகர்ப்புற நல வாழ்வு மையங்களை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும்’’ என வலியுறுத்தினார்.
மாநகர சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘‘திருப்பூர் மாநகரில் நகரப்புற நல வாழ்வு மையங்கள் கட்டப்பட்டு தற்போது ஏராளமானவை பயன்பாட்டில் உள்ளது. இன்னும் சில நகர்ப்புற நல வாழ்வு மையங்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டு நியமிக்கப்படும் பட்சத்தில் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’’ என தெரிவித்தனர்.
The post மருத்துவ சேவையை உறுதிபடுத்தும் வகையில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? appeared first on Dinakaran.