திருவாரூர், மே 15: திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து கோவை மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக ரயில் மூலம் நேற்று 2 ஆயிரத்து 500 மெ.டன் அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்தின் உணவு உற்பத்தியில் டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதில் குறிப்பாக நெல் உற்பத்தியானது 90 சதவிகித அளவில் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் குறுவை மற்றும் சம்பா என மொத்தம் 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி பணியினை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடப்பு பருவத்திற்காக கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரையில் 5 லட்சத்து 20 ஆயிரம் மெ.டன் சம்பா நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அனைத்தும் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இவைகளிலிருந்து தினந்தோறும் சுமார் ஆயிரம் டன் அளவில் மாவட்டம் முழுவதும் உள்ள 26 நவீன அரிசி ஆலைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அரிசியாக அரைக்கப்படும் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் வெளி மாவட்டங்களின் பொது விநியோக திட்டத்திற்காகவும் அரிசி மற்றும் நெல்கள் திருவாரூர், நீடாமங்கலம், திருத்துறைபூண்டி, மன்னார்குடி மற்றும் பேரளம் ரயில் நிலையங்களிருந்து சரக்கு ரயில் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று கோவை மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக ரயில் மூலம் 42 வேகன்களில் 2 ஆயிரத்து 500 மெ.டன் அரிசி மூட்டைகளை அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்.
The post பொது விநியோக திட்டத்திற்காக கோவைக்கு 1500 மெ.டன் அரிசி ரயில் மூலம் அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.