திருவாரூர், மே 15: திருவாரூர் மாவட்டத்தில் பால்வளத்துறை மூலம் நாள் ஓன்றுக்கு 44 ஆயிரத்து 875 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு அதில் 20 ஆயிரத்து 995 லிட்டர் உள்ளுர் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பால்வளத்துறை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்கள் மற்றும் இணைதுறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் நடைபெற்றது. பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் அண்ணாதுரை, கலெக்டர் மோகனச்சந்திரன், எம்பி செல்வராஜ் , எம்எல்ஏக்கள் பூண்டிகலைவாணன், மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியபோது, தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பால்வளத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் 57 பால் உற்பத்தி சங்கங்கள் உள்ளது. அதை அதிகபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 8 ஆயிரத்து 331 உறுப்பினர்களிடமிருந்து நாளொன்றுக்கு சராசரியாக 44 ஆயிரத்து 875 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும் நிலையில் இதில் 20 ஆயிரத்து 995 லிட்டர் உள்ளுர் விற்பனை போக, தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு 23 ஆயிரத்து 880 லிட்டர் பால் அனுப்பப்பட்டு வருகிறது. ரூ.3 ஊக்கத்தொகைக்காக 8 ஆயிரத்து 331 உறுப்பினர்களுக்கும் ரூ.3 கோடியே 64 லட்சத்து 84 ஆயிரத்து 774 தொகை வழங்கப்பட்டுள்ளது. கறவைமாட்டு கடன் ரூ.2 கோடியே 48 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில் 381 உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு பால் உற்பத்தியை பெருக்க கால்நடை வளர்ப்பதற்கு மிகுதியான நபர்களுக்கு கறவை மாட்டு கடன் வழங்க முனைப்பு மேற்கொண்டுள்ளோம்.
இதை பயன்படுத்திக்கொண்டு விவசாய பெருங்குடி மக்கள் பால் உற்பத்தியை பெருக்க முன்வரவேண்டும். சங்கங்களில் தரத்தின் அடிப்படையில் பால் கொள்முதல் செய்ய ஏதுவாக 29 சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 23 சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. 2023-2024ம் ஆண்டு இறுதிதணிக்கை அறிக்கையின்படி 6 ஆயிரத்து 840 சங்க உறுப்பினர்களுக்கு கூடுதல் கொள்முதல் விலையாக ரூ.59 லட்சத்து 51 ஆயிரத்து 356 வழங்கப்பட்டுள்ளது. வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின்கீழ் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 6 சங்கங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் செலவில் சங்கங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கணினி, பால் பரிசோதனைக்கருவி, பதிவேடுகள் மற்றும் பால்கேன்கள் உள்ளிட்ட பால் கொள்முதல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பாக ரூ. ஓரு லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான பால் உற்பத்தி பால் பரிசோதனைக்கருவி, பதிவேடுகள் மற்றும் பால்கேன்கள் உள்ளிட்டவைகளை பயனளிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
The post திருவாரூர் மாவட்ட பால்வளத்துறை மூலம் தினமும் 44 ஆயிரத்து 875 லிட்டர் பால் கொள்முதல் appeared first on Dinakaran.