மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம் பாயும்

6 hours ago 6

'சுத்தம் சுகம் தரும்' என்ற நெறிமுறையை அடிப்படையாகக்கொண்டு, மத்திய அரசு மற்றும் தமிழக அரசு அனைத்து இடங்களையும் சுத்தமாகவும் குப்பையில்லாமல் பராமரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசாங்கம் "தூய்மை இந்தியா" என்ற இயக்கத்தையும், தமிழக அரசு "தூய்மை இயக்கம்" என்ற சிறப்பு முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மருத்துவ கழிவுகளை பிரித்தெடுத்து அழிப்பது மிகவும் முக்கியமானதாகும். தங்களுக்குள்ள நோய்கள் குணமாக மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்கிறார்கள். அங்கு சிகிச்சை அளிக்கும்போது பல கழிவுகள் குறிப்பாக ரத்த கழிவுகள் உருவாகின்றன. இந்த கழிவுகளை முறையாக அழிக்காமல் கண்ட இடங்களில் போட்டு குவித்தால் அதனால் மேலும் பல நோய்கள் புதிதாக ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் சேரும் கழிவுகளை அழிக்க தமிழக அரசு ஒரு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ கழிவுகளை தினமும் சேகரித்து நவீன எந்திரங்கள் மூலம் அழித்தும், மறுசுழற்சி செய்தும் வருகின்றன. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் பல மருத்துவமனைகளில் சேரும் கழிவுகளை அழிக்காமல் தமிழ்நாட்டில் கேரள எல்லைப் புறங்களில் வந்து கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர். கோவை உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில், லாரிகளில் மருத்துவ கழிவுகளை கொண்டுவந்து கொட்டிவிட்டு தப்பிவிடுகின்றனர். குறிப்பாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில் லாரிகளில் மருத்துவ கழிவுகளை கொண்டுவந்து கொட்டிவிட்டு ஓடிவிடுகிறார்கள். பல நேரங்களில் உஷாரான மக்கள் அந்த லாரிகளைப்பிடித்து மீண்டும் கழிவுகளை ஏற்ற சொல்லி கேரளாவுக்கே திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.

இதுபோல தமிழ்நாட்டிலும் உள்ள சில மருத்துவமனைகள் மருத்துவ கழிவுகளை பொதுவான குப்பை கிடங்குகளிலும், ஊருக்கு வெளியே உள்ள பொதுஇடங்களிலும் கொட்டிவிடுகிறார்கள். இதனால் மக்கள் பல்வேறு நோய்களுக்குள்ளாகின்றனர். காற்று மாசுபடும் நிலையில், நோய் தொற்றுகளும் பரவுகின்றன. மேலும், நிலத்தடிநீரும் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க தமிழக அரசு உயிரி மருத்துவ கழிவுகளை குவிக்கும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைக்கும் வகையில் ஒரு சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. இதுமட்டுமல்லாமல் அந்த குற்றத்தை செய்தவர்கள் தலைமறைவாக இருந்தால் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அந்த சட்டத்தில் இடம் இருக்கிறது. இவ்வாறு மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்களை கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு இணையாக தண்டிக்க இந்த சட்டம் வழிசெய்கிறது.

கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அதாவது, கடந்த ஏப்ரல் 26-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு 30-ந்தேதி நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு கவர்னர் எந்தவித தாமதமும் செய்யாமல் கடந்த ஜூன் 13-ந்தேதி ஒப்புதல் கொடுத்துவிட்டார். இந்த மசோதா கவர்னர் ஒப்புதல் கொடுத்தவுடன் சட்டமாகி அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், அதை முறையாக நடைமுறைப்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும். மருத்துவமனை உரிமையாளர்களும் இந்தச் சட்டத்தின்கீழ் குற்றவாளிகளாகக் கருதப்படலாம் என்பதால் அவர்களுக்கும் இனி பயத்தை கொடுக்கும். சட்டம் கொண்டு வருவதோடு நிறுத்தி விடாமல் மருத்துவ கழிவுகளை மருத்துவமனைகள் எவ்வாறு கையாளுகிறது என்பதை அடிக்கடி சோதனை செய்து பார்க்க வேண்டும். மேலும் அவற்றை அழிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றச் செய்யவேண்டும். அதற்கான மேலும் வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குள் வரும் வாகனங்களையும் எல்லைப் பகுதிகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 

Read Entire Article