
பர்மிங்காம்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 371 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் அதை இங்கிலாந்து அணி கடைசி நாளில் வெற்றிகரமாக விரட்டிப்பிடித்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது பர்மிங்காம் மைதானத்தில் இந்திய அணி பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் இங்கு விளையாடிய 8 டெஸ்டில் ஆடி 7-ல் தோல்வியும் ஒன்றில் டிராவும் கண்டிருந்தது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது, முதல் போட்டிக்கு பின் நாங்கள் பேசிய விஷயங்களில் இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டோம். எங்களுடைய பவுலிங் மற்றும் பீல்டிங் பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது. இது போன்ற பிட்ச்சில் 400 - 500 ரன்கள் அடித்தால் எங்களால் வெற்றியின் அருகே இருக்க முடியும் என்பது தெரியும்.
ஒவ்வொரு முறையும் நாங்கள் நிறைய கேட்ச்களை மிஸ் செய்ய மாட்டோம். ஆகாஷ் தீப் தம்முடைய இதயத்திலிருந்து பவுலிங் செய்தார். அவர் வீசிய லென்த், இடங்கள் பந்தை இருபுறமும் நகர்த்திய விதம் அற்புதமானது. இது போன்ற பிட்ச்சில் அதை செய்வது கடினமானது. எங்களுடைய பவுலர்கள் இங்கிலாந்தின் டாப் ஆர்டரை ஆட்டிப் பார்த்தது அற்புதமானது.
பிரசித் கிருஷ்ணா விக்கெட்டுகள் எடுக்காவிட்டாலும் நன்றாகவே பவுலிங் செய்தார். இந்தத் தொடரை என்னுடைய பங்களிப்பால் வென்றால் கண்டிப்பாக நான் மகிழ்ச்சியாக இருப்பேன். நான் எப்போதும் பேட்ஸ்மேனாக விளையாடி முடிவுகளை எடுக்க விரும்புகிறேன்.
கேப்டனாக இருந்து கொண்டு பேட்ஸ்மேனாக சிந்தித்தால் ரிஸ்க் எடுக்க முடியாது. அடுத்த போட்டியில் பும்ரா கண்டிப்பாக விளையாட வருவார். லார்ட்ஸ் போன்ற மைதானத்தில் உங்களுடைய நாட்டின் கேப்டனாக செயல்படுவதை விட வேறு கவுரவம் இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.