கச்சிரோலி,
மராட்டியத்தின் கச்சிரோலி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மாவோயிஸ்டு தம்பதியை பிடித்து தருபவர்களுக்கு அல்லது அவர்களை பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த மாவோயிஸ்டு தம்பதி போலீசில் சரண் அடைந்துள்ளது. வருண் ராஜா முசாகி (வயது 27) மற்றும் அவருடைய மனைவி ரோஷனி விஜயா வசாமி (வயது 24) ஆகிய இருவரும் கச்சிரோலி போலீசில் சரண் அடைந்த நிலையில், இதுவரை சரணடைந்த மொத்த மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 674 ஆக உயர்ந்து உள்ளது.
கொன்டா பகுதியிலுள்ள மாவோயிஸ்டு அமைப்பில் 2015-ம் ஆண்டு சேர்ந்த முசாகி துணை தளபதி, தளபதி ஆகிய பதவிகளை வகித்திருக்கிறார். 10 என்கவுன்டர்கள், படுகொலைகள் மற்றும் 5 வேறு குற்றங்கள் என 15 குற்ற சம்பவங்களில் இவர் போலீசாரால் தேடப்பட்டார். ரோஷனியும், மாவோயிஸ்டு அமைப்பில் 2015-ம் ஆண்டில் சேர்ந்து பணியாற்றி வந்து உள்ளார். இந்நிலையில், இருவரும் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு போலீசில் சரண் அடைந்து உள்ளனர்.