மராட்டியத்தில் சத்ரபதி சிவாஜி சிலையை திறந்து வைத்தார் ராகுல் காந்தி

3 months ago 21

மும்பை,

மராட்டிய மாநிலம் கோலாப்பூருக்கு சென்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, அங்கு சத்ரபதி சிவாஜியின் சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, முன்னாள் மந்திரி பாலாசாகேப் தோரட், மாநிலங்களவையில் கட்சியின் குழுத் தலைவர் சதேஜ் பாட்டீல், கட்சியின் மாநில பொறுப்பாளர் ரமேஷ் சென்னதலா, மாநில எதிர்க்கட்சி தலைவர் விஜய் வேடத்வார் மற்றும் பிற தலைவர்கள் கலந்து கொண்டனர். 

பின்னர் ராகுல் காந்தி பேசியதாவது, "சத்ரபதி சிவாஜியின் சிலை இன்று திறக்கப்பட்டது. ஒருவரின் சித்தாந்தத்தையும் அவரது செயல்களையும் நாம் முழு மனதுடன் ஆதரிக்கும்போது ஒரு சிலை உருவாகிறது. நாடு அனைவருக்கும் சொந்தமானது, அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும், யாருக்கும் அநீதி இழைக்கப்படக்கூடாது என்ற செய்தியை சத்ரபதி சிவாஜி வழங்கினார்.

இன்று இந்தியாவில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே சண்டை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சித்தாந்தம், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், சமத்துவம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தவும் பாடுபடுகிறது. இது சத்ரபதி சிவாஜியின் சித்தாந்தம். இரண்டாவது சித்தாந்தம், அரசியலமைப்பை அழிப்பதில் ஈடுபட்டுள்ளது. மக்களை மிரட்டுகிறது.

அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் புதியதல்ல. சிவாஜி மகாராஜ் எந்த சித்தாந்தத்துடன் போராடினாரோ, அதே சித்தாந்தத்துடன் காங்கிரஸ் கட்சியும் போராடி வருகிறது. பாஜக அமைத்த சத்ரபதி சிவாஜியின் சிலை, சில நாட்களிலேயே உடைந்தது. சிவாஜிக்கு சிலை வைத்தால் போதாது, அவரது சித்தாந்தமும் பாதுகாக்கப்பட வேண்டும். மக்களைப் பயமுறுத்தி, அரசியலமைப்பையும், நாட்டில் உள்ள அமைப்புகளையும் அழித்த பிறகு சத்ரபதி சிவாஜி முன் தலைகுனிந்து வணங்குவதில் எந்தப் பயனும் இல்லை. அவரது வழியை பின்பற்றி, மக்களின் நீதிக்கான உரிமைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்று தெரிவித்தார். இதற்கு முன்னதாக நேராக சத்ரபதி மகாராஜின் சமாதி இடத்திற்கு சென்று மாலையணிவித்து 'தரிசனம்' செய்தார்.

Read Entire Article