
டெல்லி,
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதல் நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இந்திய முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பாகிஸ்தானின் கிராணா மலையில் உள்ள அணு ஆயுத மையத்தை இந்தியா தாக்கியதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த விமானப்படை ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, கிராணா மலையில் அணு ஆயுத மையம் செயல்படுவதாக எங்களிடம் கூறியதற்கு நன்றி. எங்களுக்கு அது தெரியாது. கிராணா மலை மீது என்ன இருக்கிறதோ? விமானப்படை அங்கு தாக்குதல் நடத்தவில்லை' என்றார்.