
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
இதில் இருந்து ஏராளமான சங்கு வளையல்கள், சில்லு வட்டுகள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், செவ்வந்திகல், சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆபரணங்கள், சதுரங்க ஆட்ட காய்கள், பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட செங்கல், சேர நாட்டு செப்பு காசுகள், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஆச்சர்யங்கள் நிறைந்த பல தொல்பொருள்களை தன்னுள் வைத்திருக்கும் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வுத் தளத்தில் 1.90 மீட்டர் ஆழத்தில், சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 1.8 மி.மீ சுற்றளவும், 0.6 மி.மீ கணமும், 3.4 கிராம் எடையும் கொண்ட இந்த அணிகலன் அதன் இணையோடு கிடைத்திருப்பது கூடுதல் சிறப்பு. இன்னும் பழந்தமிழர் பொக்கிஷங்கள் பலவற்றை தொல்லியல் துறை வெளிச்சத்திற்கு கொண்டு வரும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.