
பெலகாவி,
பாகிஸ்தான் அடாவடிக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது பற்றியும், பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்தியாவின் வெற்றி குறித்தும் ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி செய்தியாளர்களிடம் தெரிவித்து வந்தார். இதன் மூலம் அவர் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரபலமானார்.
இவரது கணவர் தாஜூதீனும் ராணுவ அதிகாரி ஆவார். அவரது சொந்த ஊர் பெலகாவி மாவட்டம் கோகாக் தாலுகா கொத்தனூர் ஆகும். தாஜூதீனின் தாய், தந்தை கொத்தனூரில் தான் வசிக்கின்றனர். இந்த நிலையில், கர்னல் ஷோபியா குரேஷியின் கணவர் வீடு தாக்கப்பட்டு உள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தான் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் அனீஸ் உதீன் என்பவர் எக்ஸ் வலைதளத்தில் பதிவு மற்றும் புகைப்படம் வெளியிட்டு இருந்தார்.
இதனை பெலகாவி போலீஸ் சூப்பிரண்டு பீமா சங்கர் குலேத் மறுத்திருந்தார். இந்த நிலையில், சமூக வலைதளத்தில் பொய் தகவல்களை வெளியிட்டதாக அனீஸ் உதீன் மீது பெலகாவி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவாகி உள்ளது. அனீஸ் உதீனை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவர் இந்தியாவில் இருந்தால் கண்டிப்பாக கைது செய்வோம் என்றும், ஆனால் அவர் வெளிநாடுகளில் இருந்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை என்றும் போலீஸ் சூப்பிரண்டு பீமா சங்கர் குலேத் தெரிவித்துள்ளார்.