மராட்டிய சட்டசபை தேர்தல்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, அரசு பஸ்சில் இலவச பயணம்; மகாவிகாஸ் அகாடி கூட்டணி வாக்குறுதி

2 months ago 12

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இரு கூட்டணிகளும் தேர்தல் களத்தில் வாக்குறுதிகளை வாரி இறைத்து வருகின்றன. மகாயுதி அரசு சமீபத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 மாதாந்திர உதவித்தொகை திட்டத்தை அறிவித்து அமல்படுத்தியது. இந்தநிலையில் தேர்தலில் வெற்றிபெற்றால் இந்த தொகை ரூ.2,100 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அந்த கூட்டணி அறிவித்து இருந்தது.

இந்தநிலையில், மராட்டிய சட்டப் பேரவைத் தேர்தலில் தேர்தல் அறிக்கையை மகாவிகாஸ் அகாடி கூட்டணி வெளியிட்டது. அதில்,

மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உறுதி செய்யப்படும். மேலும் கிருஷி சம்ருத்தி யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் பயிர்க்கடனை முறையாக திருப்பி செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும். ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு, மருந்துகள் இலவசமாக வழங்கப்படும்.

மகாவிகாஸ் அகாடி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டிற்கான 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

Read Entire Article