மராட்டிய சட்டசபை தேர்தலில் முறைகேடு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

3 hours ago 2

புதுடெல்லி,

சிவசேனா (உத்தவ் பால்தாக்கரே ) எம்பி சஞ்சய் ராவத், தேசிய மாநாட்டுக் கட்சி - சரத் பவார் பிரிவு எம்.பி சுப்ரியா சுலே உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் தலைவர்களுடன் இணைந்து ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டியத்தில் போட்டியிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி நாங்கள் இங்கே அமர்ந்துள்ளோம். வாக்காளர்கள் மற்றும் வாக்குப் பட்டியல் தொடர்பாக எங்கள் குழுக்கள் ஆய்வு நடத்தியுள்ளன. பல முரண்பாடுகளை கண்டறிந்துள்ளோம். 2019 சட்டசபை தேர்தலுக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் மராட்டியத்தில் புதிதாக 32 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், 2024 மக்களவைத் தேர்தலுக்கும் 2024 மராட்டிய சட்டசபை தேர்தலுக்கும் இடைப்பட்ட 5 மாதங்களில் மட்டும் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில், புதிதாக சேர்க்கப்பட்ட 39 லட்சம் வாக்காளர்கள் யார்? இந்த எண்ணிக்கையானது இமாசல் பிரதேசத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு சமம். மராட்டியத்தில் வாக்கு செலுத்தும் வயதுடைய மொத்த மக்கள் தொகையைவிட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

திடீரென வாக்காளர்கள் உருவானது எப்படி? தேர்தல் ஆணையத்திடம் உள்ள மராட்டிய வாக்காளர் பட்டியலை காங்கிரஸ், சிவசேனா-யுபிடி, என்சிபி-எஸ்எஸ் ஆகிய கட்சிகள் கோருகின்றன. மக்களவைத் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல்கள் ஆகியவற்றின்போது பயன்படுத்தப்பட்ட தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல்கள் எங்களுக்குத் தேவை. இந்த விஷயத்தில் தங்களுக்கு வாக்காளர் பட்டியலை வழங்கி, அதை தேர்தல் ஆணையம் நிரூபிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும்.

அரசியலமைப்பை முற்றிலுமாக அழிக்கும் பாதையை நோக்கி செல்வதைப் பார்க்கிறோம். எனவே, அரசியலமைப்பைப் பாதுகாக்கும் பணி முக்கியம். வாக்காளர் பட்டியலை எங்களுக்கு வழங்க தேர்தல் ஆணையம் தயாராக இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏதோ தவறு இருக்கிறது, அது அவர்களுக்குத் தெரியும் என்பதே அதற்கு ஒரே காரணம். தேர்தல் ஆணையத்துக்கு உயிர் இருந்தால், அது ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இல்லாவிட்டால், தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் அடிமை என்று பொருள் கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article