சென்னை: மயிலாடுதுறை முட்டம் கிராமத்தில் இரு இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்கிறது. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத அரசு நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல் போட்டோஷூட், வீடியோஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார். முதல்வருக்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தனக்குதானே புகழ்ந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம், ஆட்சி நடத்துவதில் இருக்கிறதா? முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை, இந்தக் கொலையை வாய் தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது என்று கூறுகிறது. வழக்கை விசாரிப்பதற்கு முன்னரே காவல் துறை தீர்ப்பை எழுதுவதுதான் ஸ்டாலின் மாடலா? எனவே, இளைஞர்கள் கொலைக்கான காரணத்தை தீர விசாரிப்பதுடன், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.