மனிதர்களின் உணர்வோடு கலந்த தாய்மொழி

19 hours ago 1

மக்கள் எத்தனை மொழியை தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டாலும், தாய்மொழியின் மீது பற்று இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில், தாய்மொழியின் சிறப்பை போற்றும் வகையிலும், தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

பிப்ரவரி 21-ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அனுசரிப்பது குறித்து கடந்த 1999-ம் ஆண்டில் யுனெஸ்கோ பொது மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 2000-ம் ஆண்டிலிருந்து சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு இன்று (21.2.2025) சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச தாய்மொழி தினத்தின் 25-வது ஆண்டு நிறைவடைந்துள்ளதை குறிக்கும் வகையில், அதையே இந்த ஆண்டின் கருப்பொருளாக முன்வைக்கப்பட்டுள்ளது. "சர்வதேச தாய்மொழி தினத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம்" என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள்.

மொழியியல் பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளத்தின் முக்கியத்துவத்தை சர்வதேச தாய்மொழி தினம் எடுத்துக்காட்டுகிறது. எனவே, இன்றைய தினம் அவரவரின் தாய்மொழியின் தனித்துவத்தை கொண்டாடுகின்றனர். தாய்மொழியின் மொழியின் சிறப்பு தொடர்பான விவாதங்கள், கருத்தரங்குகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். தாய்மொழியை போற்றி பாதுகாக்க வேண்டியதன் அவசியம் மற்றும் மொழியின் சிறப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்க பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

ஒருவர் எத்தனை மொழிகள் கற்றாலும், முதலில் தன் தாய் மொழியில் சிந்தித்துதான் அதை பிற மொழிக்கு மாற்றுகிறார். மனிதர்களில் பெரும்பாலும் உணர்ச்சி வசப்படுகிறபோது தாய் மொழியிலேயே அந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். தாய்மொழி என்பது மனிதர்களின் உணர்வோடு கலந்தது. அத்தகைய சிறப்புமிகு தாய் மொழியை குழந்தைகள் விருப்பமுடன் கற்றுக்கொள்ள எல்லா பெற்றோரும் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் மன தைரியத்துடன் வளர தாய் மொழியே உதவி செய்கிறது. 

புரிந்துகொள்ளும் மொழியில் கல்வி தேவை

ஒவ்வொரு மொழியும் அதற்கென தனிப்பட்ட வரலாறு, அடையாளம் மற்றும் சிறப்பை கொண்டுள்ளது. ஆனால் கல்வி கற்பவர்களில் 40 சதவீதம் பேருக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிக்கப்படுவதில்லை என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

"உலகளவில் 7,000 மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் 351 மொழிகள் மட்டுமே கல்வியில் பயன்படுத்தப்படுகின்றன. கல்வி பயிலும் பல லட்சம் மாணவர்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ள முடியாத மொழியில்தான் கற்பிக்கப்படுகிறது. குழந்தைகளின் அடிப்படை கற்றல், தாய்மொழி சார்ந்த கல்வியுடன்தான் தொடங்குகிறது. ஏனெனில் மொழிகள் முக்கியம். ஒவ்வொரு குழந்தையும் அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் கற்றுக்கொள்வதை உறுதி செய்வோம்" என்றும் யுனெஸ்கோ கூறி உள்ளது.

Read Entire Article