மனித-வனஉயிரின மோதலை தடுக்க புதிய யுக்தி: சிறுமுகை வனப்பகுதியில் 2 ஏக்கரில் புற்கள் வளர்க்க திட்டம்

3 weeks ago 5

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி உள்ளிட்ட 7 வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மனித – வனஉயிரின மோதல்கள் நிகழ்வதும், இதனால், உயிரிழப்புகள் ஏற்படுவதும், காயமடைவதும் ஏற்பட்டு வருகின்றன. மனித-வனஉயிரின மோதலுக்கான பல காரணங்கள் கூறப்பட்டாலும், அதில் ஒரு காரணமாக, வனப்பகுதிகளில் அந்நிய நாட்டு களைச்செடிகளான உன்னிச்செடி, விவசாய முள், சென்னா உள்ளிட்டவை ஆக்கிரமித்துள்ளன. இந்த களைச்செடிகளால் உள்நாட்டு தீவன தாவரங்கள் வனப்பகுதியில் வளர வாய்ப்பு ஏற்படுவதில்லை.
இதனால், புற்கள் உள்ளிட்ட பயிர்களை உண்ணும் தாவர உண்ணிகள் தங்களது உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அருகில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. அங்கு புகும் காட்டு யானை, மான், காட்டுமாடு உள்ளிட்ட தாவர உண்ணிகள் விளை நிலங்களை தொடர்ந்து சேதம் செய்து வருவதோடு மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

இதுவும் வனவிலங்குகள் உணவு தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளை நாடி வருவதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு வனத்துறை சார்பில் தமிழ்நாடு உயிர் பன்முகத்தன்மை மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் ஜப்பான் நாட்டின் சர்வதேச கூட்டுறவு கழக முகமை நிதியுதவியுடன் புல்வெளி மேலாண்மை திட்டம் காப்புக்காட்டு பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்தாண்டு 550 ஹெக்டேர் அளவிற்கு புற்கள் வளர்க்கப்பட்டுள்ளன. இதற்கான பயிற்சி தமிழக முழுவதும் 250 வனப்பணியாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த, வனப்பணியாளர்கள் தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் அந்தந்த சீதோஷ்ண நிலை, தட்ப வெப்பம் உள்ளிட்டவற்றை கண்டறிந்து அங்கு எந்த மாதிரியான புற்கள் வளரும்? என்பதை கண்டறிந்து அதற்கேற்ப அப்பகுதிகளில் தீவன புற்களை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை வனப்பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் புல் வெளிகளை உருவாக்கும் மாதிரி செயல் விளக்க திடல் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வனப்பொருட்கள் மற்றும் உயிரியல் துறை பேராசிரியரும், தலைவருமான பரணிதரன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வனப்பகுதிகளில் அந்நிய நாட்டு களைச்செடிகளான உன்னிச்செடி, விவசாய முள், சென்னா உள்ளிட்ட தாவரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இந்த தாவரங்கள் இருக்கும் வரை புற்களும், தீவனப்பயிர்களும் வளர வாய்ப்பு ஏற்படுவதில்லை. இதனால், தீவனப்பயிர்களையும், புற்களையும் உண்ணும் தாவர உண்ணிகளான யானை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் உணவு தேவை பூர்த்தியாவதில்லை. இதனால், வனவிலங்குகள் உணவைத்தேடி மக்கள் வசிக்கும் பகுதிக்கு வருகின்றன. அவ்வாறு வரும்போது மனித-வனஉயிரின மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதனை தடுக்க, தமிழக அரசு வனத்துறை சார்பில் தமிழ்நாடு உயிர் பன்முகத்தன்மை மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் ஜப்பான் நாட்டின் சர்வதேச கூட்டுறவு கழக முகமை நிதியுதவியுடன் காப்பு காட்டுப்பகுதிகளில் புல்வெளி மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு அதன் ஒரு பகுதியாக தமிழக முழுவதும் 550 ஹெக்டேர் அளவிற்கு புற்கள், தீவனப்பயிர்கள் வளர்க்கப்பட்டுள்ளன. இதற்காக 250 வனப்பணியாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. தாவர உண்ணிகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற புல் மற்றும் தீவன இனங்களை கண்டறிந்து அதற்கேற்ப அன்னிய களைச்செடிகளை ஒழிக்கும் வகையில் வேகமாக வளரும் தன்மையுடைய புற்கள், அனைத்து தாவர உண்ணிகளும் உண்ணும் புற்கள், எளிதான முறையில் புற்களை வளர்க்கும் முறைகளை கண்டறிந்து அதற்கேற்ப புற்களை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட அத்திக்கடவு பகுதியில் 25 ஏக்கரில் புற்கள் நடப்பட்டன. இதனால், வன விலங்குகள் புற்கள் வளர்ந்த இடத்தை தனது வேட்டையாடும் பகுதியாகவும், ஓய்வெடுக்கும் பகுதியாகவும், உணவாக உண்டும் பயன்படுத்தின. புற்கள் நடுவதால் உணவு தேவைக்காக ஊருக்குள் வனவிலங்குகள் வருவது தடுக்கப்படும். புல்லில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் கோடை காலத்தில் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீரும் கிடைத்து விடும். இதனால், தண்ணீரை தேடி வனவிலங்குகள் அலைய வேண்டிய தேவை இருக்காது. புற்களை உண்ண வரும் மான், காட்டு மாடு, யானை உள்ளிட்டவற்றை வேட்டையாட புலி, சிறுத்தை அங்கு வரும். இதனால், புற்கள் இருக்கும் இடங்களில் புலி, சிறுத்தை அதிகம் வாழும். புல்வெளிகளை விதைகள் மூலமாகவும், தண்டுகள், கொத்துக்கள் மூலமாக அவற்றை வளர்க்கும் உத்திகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக, தமிழகம் முழுவதும் வனப்பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காகவும், இடத்திற்கு ஏற்ப சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தீவனப்பயிர்களை உருவாக்கும் விதமாகவும் தமிழகத்திலேயே முதன் முறையாக சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை வனப்பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் புல்வெளிகளை உருவாக்கும் மாதிரி செயல் விளக்க திடல் அமைக்கப்படவுள்ளது. இந்த காப்புக்காடு பகுதியில் தற்போது அந்நிய நாட்டு களைச்செடிகள் முழுவதுமாக வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் விரைவாகவும், அனைத்து தாவர உண்ணிகளும் உண்ணும் வகையிலும், எளிதாக வளரும் தன்மையுடைய மூங்கில் புல், குளம்புல், சர்க்கரைப்புல் அருகம்புல், தென் நட்டுப்புல், சீமை சிறும்புல், கோடைப்புல் உள்ளிட்ட 7 வகையான புற்களை கண்டறிந்து அதனை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், தாவர உண்ணிகள் வனப்பகுதியை விட்டு உணவுக்காக வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்பு இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மனித-வனஉயிரின மோதலை தடுக்க புதிய யுக்தி: சிறுமுகை வனப்பகுதியில் 2 ஏக்கரில் புற்கள் வளர்க்க திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article