மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நேற்று நள்ளிரவு முதல் வரும் 30ம் தேதி வரை கூடுதலாக 5 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்துள்ளது. விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் பயணிகளிடமும் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் 76வது குடியரசு தின விழா, நாடு முழுவதிலும் வரும் 26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, நாடு முழுவதிலும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்பட மக்கள் அதிகளவில் கூடுமிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. அதேபோல், சென்னை விமானநிலையத்திலும் நேற்று நள்ளிரவு முதல் கூடுதலாக 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமலுக்கு வந்துள்ளது. இந்த 5 அடுக்கு பாதுகாப்பு, வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும். மேலும், வரும் 24, 25, 26 ஆகிய 3 நாட்களில் உச்சகட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு, உள்நாட்டு முனையங்களுக்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவு வாயில் பகுதியிலேயே நிறுத்தி, சந்தேகத்துக்குரிய வாகனங்களை மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்பு படையினா் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், விமானநிலையத்தின் ஓடுபாதை உள்பட அனைத்து பகுதிகளிலும் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் வெடிகுண்டு நிபுணா்கள் பரிசோதித்து வருகின்றனா். விமானநிலைய வளாகத்தில், துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்து பணிகளில் ஈடுபட்டு கண்காணிக்கின்றனா். மேலும், சென்னை விமானநிலைய மல்டிலெவல் காா் பாா்க்கிங் பகுதியில் நீண்ட நேரமாக நின்றிருக்கும் வாகனங்களை வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனையிட்டு விசாரிக்கின்றனர்.
அதேபோல், சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக, விமானங்கள் நிற்கும் பகுதிகளில் மோப்ப நாய்களுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வீரர்கள் தீவிரமாக சோதனையிட்டு கண்காணிக்கின்றனர். மேலும், விவிஐபி பாஸ் வழங்குவதிலும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அங்கு ஏற்கனவே உள்ள சிசிடிவி காமிராக்களுடன் கூடுதலாக அமைத்து, விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து, 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும், இங்கிருந்து வெளிநாடு செல்லும் பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. வழக்கமான சோதனைகளுடன் விமானத்துக்கு உள்ளே செல்லும் இடத்தில் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சோதனை நடைபெறுகிறது. அவர்களின் கைப்பைகளை துருவி சோதிக்கப்படுகிறது.
மேலும் ஊறுகாய், திரவப்பொருட்கள், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில் போன்றவற்றை எடுத்து செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமானநிலைய சரக்கு பார்சல் பகுதிகளுக்கு வரும் அனைத்து பார்சல்களையும் பலகட்ட சோதனைகளுக்கு பிறகே விமானத்தில் ஏற்ற அனுமதிக்கின்றனர். இதையடுத்து விமானப் பயணிகளுக்கு கூடுதல் சோதனை நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படுவதற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், பன்னாட்டு விமானப் பயணிகள் மூன்றரை மணி நேரம் முன்னதாக வரவேண்டும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலையம் தற்போது முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டதால், பயணிகளிடையே பரபரப்பு நிலவியது.
The post சென்னை விமானநிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு: பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை appeared first on Dinakaran.