மதுரை: மதுரையில் நேற்று முன்தினம் மாலை மூன்று மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்ததது. 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் கொட்டிய மழையால் மதுரை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் பாதிப்படைந்தனர். உடனே கலெக்டர் சங்கீதா மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து பணிகள முடுக்கிவிட்டார். இதையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து, அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் சங்கீதா மற்றும் மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் மற்றும் முக்கிய அதிகாரிகளிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும், மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நிலவரத்தை கேட்டதுடன், வெள்ள பாதுகாப்பு நிவாரணப் பணிகளை தொடர்ந்து கண்காணித்தார். நேற்று முன்தினம் இரவு துவங்கி நேற்று வரை, அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், கே.என்.நேரு, எம்பி சு.வெங்கடேசன், எம்எல்ஏக்கள் தளபதி, வெங்கடேசன், கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு சீரமைப்பு பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டனர். 3 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டன. மாநகராட்சியினர் தீவிர நடவடிக்கைகளால், செல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளநீர் விரைவாகவே வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
* அமைச்சர் மூர்த்தி செல்லூர் ராஜூ திடீர் சந்திப்பு
மதுரை, செல்லூர் கட்டபொம்மன் நகரில் வெள்ளநீர் சூழ்ந்த பகுதியை அமைச்சர் மூர்த்தி நேற்று ஆய்வு செய்து கொண்டிருந்தார். அங்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் பார்வையிட வந்தார். அப்போது இருவரும் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். அப்போது நிவாரணப் பணிகள் குறித்து செல்லூர் ராஜூவிடம் அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்தார். அப்போது அமைச்சர் பி.மூர்த்தி, ‘‘எல்லா இடத்திலும் ஏற்பாடுகள் செஞ்சு பாதிப்புகள் சரி செஞ்சிருக்கு. அண்ணே நீங்க என்ன சொல்றீங்களோ, நைட்டுக்குள்ளே அதை கிளியர் பண்ணிடுவோம்ணே’’ என்றார். இருவரும் அரசியலை கடந்து மக்கள் நலனுக்கான பணிகள் குறித்து பேசியது, அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The post மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகள் விறுவிறு: பல இடங்களில் இயல்பு நிலை திரும்பியது appeared first on Dinakaran.