மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் அமைய இருக்கும் ‘டைடல் பார்க்’ திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டம் அறிவித்து 2 ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் கட்டமானப் பணி கூட தொடங்கப்படாததால், சுற்றுச்சூழல் அனுமதி சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பா என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை தூங்கா நகரம், பண்பாட்டு தலைநகரம், மக்கள் நெருக்கம் மிகுந்த நகரம் என பல பாரம்பரிய அடையாளங்களுடன் மதுரை போற்றப்பட்டாலும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது பின்தங்கியே உள்ளது. சென்னை, கோவை, ஓசூரைப்போல் சொல்லிக்கொள்ளும்படி மதுரையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், பெரிய தொழிற்பேட்டைகளும் இல்லை. சுற்றுலாவையும், ஆன்மீகத்தையும் நம்பியே மதுரையின் வர்த்தகமும், வேலைவாய்ப்புகளும் உள்ளன.