போடி: மதுரை – போடி அகல ரயில் பாதை தடத்தில் மின்சார ரயில் சேவை நேற்று துவங்கியது. மதுரையிலிருந்து தேனி மாவட்டம் போடி வரை இருந்த பழமையான மீட்டர்கேஜ் ரயில்பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. கடந்தாண்டு ஜூன் 15 முதல் போடி – சென்னை இடையே எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதனிடையே, போடியில் இருந்து மதுரை செல்லும் அகல ரயில்பாதையை 25 ஆயிரம் வோல்டேஜ் திறனுடன் மின்மயமாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தன.
இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து மின்சார ரயில் இன்ஜினுடன் சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வந்தன. அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் ரயிலை இயக்கி பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன. ஆண்டிபட்டி கணவாய், பூதிப்புரம் பாலம் ஆகிய இடங்களில் சற்று வேகத்தைக் குறைத்து சோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, மதுரை – போடி தடத்தில் மின்சார ரயில் சேவை நேற்று துவங்கியது. சென்னையிலிருந்து கிளம்பிய சென்னை – போடி எக்ஸ்பிரஸ், மதுரைக்கு நேற்று காலை 6.57 மணிக்கு வந்தடைந்தது. இங்கிருந்து மின்தடத்தில் 7.26 மணிக்கு புறப்பட்டு போடிக்கு 9.48 மணிக்கு வந்தடைந்தது. அதேபோன்று மதுரை ரயில் நிலையத்தில் இருந்து மின் தடத்தில் பயணிகள் ரயில் காலை 8.20 மணிக்கு புறப்பட்டு காலை 9.58 மணிக்கு போடி ரயில் நிலையம் வந்தடைந்தது.
* ரயில் பயண நேரம்
வாரம் 3 நாள் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் – போடி எக்ஸ்பிரஸ், மதுரை சந்திப்புக்கு காலை 7.10 மணிக்கு வந்து, 7.15 மணிக்கு புறப்பட்டு 9.35 மணிக்கு போடி சென்றடையும். மேலும், போடி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், போடியில் இருந்து இரவு 8.30க்கு புறப்பட்டு, மதுரைக்கு இரவு 10.45க்கு வந்து சேரும். 10.50 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை புறப்படும். மதுரை – போடி – மதுரை பயணிகள் ரயில், மதுரையில் இருந்து தினமும் காலை 8.20 மணிக்கு புறப்பட்டு காலை 10.30 மணிக்கு போடியை வந்தடையும். பின்னர் போடியில் இருந்து தினமும் மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 7.50 மணிக்கு வந்து சேருமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post மதுரை – போடி இடையே மின்ரயில் சேவை துவக்கம் appeared first on Dinakaran.