மதுரை-தேனி மாவட்டங்களை இணைக்கும் மயிலாடும்பாறை-மல்லப்புரம் மலைச்சாலை சீரமைக்கப்படுமா?

1 month ago 11

 

வருசநாடு : மதுரை- தேனி மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம் மலைச்சாலையை சீரமைக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் தாழையூத்து கிராமத்தில் இருந்து மதுரை மாவட்டம் மல்லப்புரம் கிராமத்தை இணைக்கும் மலைச்சாலை அமைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்து மல்லபுரம் இடையே புதிய தார்சாலை அமைக்கப்பட்டது.

கடமலை-மயிலை ஒன்றியத்தில் இருந்து விருதுநகர், பேரையூர், ஏழுமலை, இராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பிரதான சாலை வழியாக செல்லுவதை விட மலைச்சாலையை பயன்படுத்தினால் பயண தூரம் குறைவு என்பதால் வாகன ஓட்டிகள் அனைவரும் மலைச்சாலையை பயன்படுத்த தொடங்கினர். மேலும் காலை, மாலை நேரங்களில் மலைச்சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் இயக்கப்பட்டது. இதனால் மலைச்சாலை வழியாக போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்த சாலையின் முக்கியத்துவம் கருதி 15 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்து மல்லப்புரம் இடையே அரசு மினி பஸ் சேவையும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் மலைச்சாலை அமைக்கப்பட்ட பின்னர் அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்காரணமாக செடிகள் ஆக்கிரமிப்பு மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலையின் அளவு குறுக தொடங்கியது. மேலும் மழையால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இதனால் அரசு பஸ் சேவை தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 10 ஆண்களுக்கு மேல் பராமரிப்பு இல்லாத காரணத்தால் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறியது.

மேலும் சாலை குறுகியதால் ஒரே நேரத்தில் ஆட்டோ, கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் கூட விலகி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த மலைச்சாலையின் ஓரங்களில் பெரும்பாலான இடங்களில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்படவில்லை. இதனால் லாரி, வேன் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் ஒன்றை ஒன்று விலகி செல்லும் போது சிறிது கவன குறைவு ஏற்பட்டாலும் பெரிய அளவில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே விபத்து அச்சத்தால் பெரும்பாலன வாகன ஓட்டிகள் மலைச்சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.

தற்போது மலைச்சாலை வழியாக பைக்குகள் மட்டுமே அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. 8 கிமீ தொலைவுடைய மலைச்சாலையில், தேனி மாவட்ட எல்லை வரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. மதுரை மாவட்ட கட்டுபாட்டில் உள்ள மீதமுள்ள 7 கிமீ தொலைவு சாலை தொடர்ந்து சீரமைக்கப்படாமல் உள்ளது என மலைக்கிராம மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து முத்தாலம்பாறை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சைக்கனி கூறுகையில், ‘‘கல்லுப்பட்டி. மதுரை மாவட்டம் எழுமலை, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களுக்கு உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக அமைக்கப்பட்டுள்ள பிரதான சாலை வழியாக சென்றால் 70 கிமீ தொலைவு செல்ல வேண்டும். ஆனால் மல்லப்புரம் மலைச்சாலையை பயன்படுத்தினால் 20 கிமீ தொலைவில் கிராமங்களுக்கு சென்று விடலாம். தற்போது சாலை அதிக சேதமடைந்து அபாயகரமான நிலையில் காணப்பட்டாலும் பயண நேரம் மற்றும் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு பெரும்பாலும் மலைச்சாலையை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே இரண்டு மாவட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து மல்லப்புரம் மலைச்சாலையை சீரமைக்க வேண்டும்’’ என்றார்.

முத்தாலம்பாறையை சேர்ந்த முருகன் கூறுகையில், வருசநாடு பகுதி மக்கள் வனத்துறை சார்பாக மலப்புரம் சாலையை சீரமைக்க கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதினால் விவசாய பொருட்களை குறிப்பிட்ட நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இது சம்பந்தமாக தேனி கலெக்டரும், மதுரை கலெக்டரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்.

இதுகுறித்து உப்புத்துறை பகுதியைச் சேர்ந்த கருப்பையா கூறுகையில், ‘‘வருசநாடு உப்புத்துறை பகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. ஆங்காங்கே தடுப்புச்சுவரும் இல்லை. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

பாதியில் நிற்கும் பணிகள்

வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சியில் மேல்வாலிப்பாறை, காந்தி கிராமம், ஐந்தரைபுலி உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. சீலமுத்தையாபுரம் கிராமம் வரை மட்டுமே தார் சாலை வசதி இருந்தது.இதனால் காந்தி கிராமம், மேல்வாலிப்பாறை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சீலமுத்தையாபுரம் கிராமத்தில் இருந்து நடந்து செல்லும் நிலை இருந்து வந்தது.

மேலும் தார்ச்சாலை வசதி இல்லாததால் விவசாயிகள் விளை பொருட்களை சந்தைக்கு அனுப்பி வைக்க மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். பள்ளி மாணவ, மாணவிகள் நாள்தோறும் 5 கி.மீ வரை நடந்து செல்லும் நிலை இருந்தது. இது போன்ற காரணங்களால் சீலமுத்தையாபுரம் கிராமத்திலிருந்து காந்திகிராமம் வரை புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் புதிய தார்ச்சாலை அமைக்க வனத்துறையினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தனர். இதையடுத்து மாவட்ட அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகள் உடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் வாயிலாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி கிராமம் வரை புதிய தார்ச்சாலை அமைக்க அனுமதி கிடைத்தது. இதனையடுத்து சீலமுத்தையாபுரம் கிராமத்திலிருந்து காந்திகிராமம் வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்தப் பணிகள் நடைபெற்று வரும் நேரத்தில் தார்ச்சாலை அமைக்க வனத்துறையினர் திடீரென தடை விதித்தனர்.

புதிய தார்ச்சாலை அமைக்கும் பகுதியில் குறிப்பிட்ட 20 முதல் 50 மீட்டர் தொலைவு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். வனத்துறையினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், தற்போது வரை தார்சாலை அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை.

ரேஷன்கடைக்கு செல்வது சிரமம்

சீலமுத்தையாபுரத்தை சேர்ந்த விவசாயி ஆண்டி என்பவர் கூறுகையில், ‘‘பல வருட போராட்டத்திற்குப் பின்பு காந்தி கிராமத்திற்கு புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால் வனத்துறையினர் மீண்டும் சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தியுள்ளனர். சாலை இல்லாததால் விவசாயிகள் விளை பொருட்களை சந்தைக்கு அனுப்பி வைப்பது மிகவும் சிரமத்திற்குரியதாக உள்ளது.

இதேபோல காந்திகிராமம், மேல்வாலிப்பாறை உள்ளிட்ட கிராமங்களுக்கான ரேஷன் கடை 5 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில் அமைந்துள்ளது.ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் அதனை தலைச்சுமையாக வீடுகளுக்குச் எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது. மழை நேரங்களில் இந்த சாலையில் மாட்டுவண்டி, டூவீலர் உள்ளிட்ட எந்த வாகனமும் இயக்க முடியாது. அது போன்ற நேரங்களில் விளை பொருட்களை சந்தைக்கு அனுப்பி வைக்க முடியாமல் விவசாயிகள் அதிகம் நஷ்டம் அடைகின்றனர்.

சீரமைக்க அனுமதி வேண்டும்

வியாபாரி கருப்பசாமி கூறுகையில், ‘‘கடமலை – மயிலை ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களுக்கும் டூவீலரில் சென்று சோப்பு உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறேன். இதில் காந்திகிராமத்திற்கு செல்வது மட்டுமே மிகுந்த சவாலாக உள்ளது. கிராமத்திற்கு செல்லும் மலைச்சாலை குண்டும் குழியுமாக பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மாவட்ட வனத்துறை அதிகாரிகள் காந்திகிராமத்திற்கு புதிய தார்ச்சாலை அமைக்க அனுமதி தரவில்லை என்றாலும், தற்போதுள்ள மலைச் சாலையை வாகனங்கள் எளிதில் சென்று வரும் வகையில் சீரமைப்பதற்கு மட்டுமாவது அனுமதி வழங்க வேண்டும்’’ என்றார்.

The post மதுரை-தேனி மாவட்டங்களை இணைக்கும் மயிலாடும்பாறை-மல்லப்புரம் மலைச்சாலை சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Read Entire Article