கணையம் காப்போம்… உயிரைக் காப்போம்!

9 hours ago 2

நன்றி குங்குமம் டாக்டர்

நீரிழிவு இந்தியா முழுவதும் மக்களுக்கு ஒரு பெரிய பிரச்னையாக மாறியுள்ள நோயாக உருவெடுத்திருக்கிறது. உலகில் நீரிழிவு உள்ளவர்களில் இந்தியா மிக அதிகமான அளவிலான பாதிப்பைக் கொண்டுள்ளது. அதிலும், டைப் 2 நீரிழிவு மிக பொதுவான வகையாகும், இது உடலில் இன்சுலினை சரியாகப் பயன்படுத்தவோ அல்லது இன்சுலினை போதுமான அளவு உற்பத்தி செய்யவோ முடியாத போது ஏற்படுகிறது.

ஆனால் பெரும்பாலான மக்கள் அறியாத முக்கியமான விஷயம் என்னவென்றால், நீரிழிவு ஆரம்பிக்கும் போது அது கணையத்தில் உள்ள சில செல்களில் ஏற்படும் பிரச்சனையைக் குறிக்கின்றது. இவை தான் பீட்டா செல்கள் (Beta Cells) என்று அழைக்கப்படுகின்றது. இவைதான் இன்சுலினை உற்பத்தி செய்கின்றன.

நீரிழிவில் பீட்டா செல்களுக்கு என்ன ஆகின்றது?

பீட்டா செல்கள், இன்சுலினை உற்பத்தி செய்வதன் மூலம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆனால், நீரிழிவு உள்ளவர்களில் இந்த பீட்டா செல்கள் சரியாக செயல்படுவதில்லை. இதன் விளைவாக, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது கடினமாகிறது. பீட்டா செல்கள் பல காரணங்களால் பாதிக்கப்படுகின்றன. அதன் முக்கியமான காரணம் உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் (Oxidative Stress).

இது உடலில் தீங்கு விளைவிக்கும் பொருட்களை உருவாக்குகிறது, இதன் மூலம் பீட்டா செல்கள் சேதமடைந்துவிடுகின்றன. இவை, தவறான உணவுப்பழக்கங்கள் (துரித உணவுகள்), உடற்பயிற்சி குறைவு, மற்றும் மனஅழுத்தம், போன்ற காரணிகளால் எளிதில் ஏற்படுகிறது.இந்த தீங்கான பொருட்கள் ரியக்டிவ் ஆக்சிஜன் ஸ்பீசியஸ் (ROS) என்று அழைக்கப்படுகின்றன, இவை பீட்டா செல்களுக்கு நேரடியாக சேதத்தை விளைவிக்கின்றன.

கணையத்தின் ஆரோக்கியத்தை பராமரிப்பது எப்படி?

கணையத்தின் ஆரோக்கியத்தை பராமரிப்பது, நீரிழிவை தடுப்பதற்கு ஒரு மிக முக்கியமான வழி.

1.சீரான உணவு பழக்கங்கள்: அதிக கீரைகள், காய்கறிகள், முழு தானியங்கள் அடங்கிய உணவுகள் கணையத்தின் செயல்பாட்டை ஆதரிக்கின்றன. அதிக சர்க்கரை மற்றும் கொழுப்புப் பண்டங்களை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இவை கணையத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.

2.போதுமான நீர் பராமரிப்பு: உடலில் நீர் குறைந்தால் சர்க்கரையின் அளவு அதிகரித்து, கணையத்தின் மீது மேலும் அழுத்தம் ஏற்படுத்தும். ஆகையால், அதிகப்படியான தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம்.

தண்ணீர் சத்து நிறைந்த பழங்களையும் உட்கொள்ளலாம்.

3.புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலை தவிர்க்கவும்: புகைபிடிப்பதும் அதிக மது அருந்துதலும் கணையத்தின் செயல்பாட்டை பாதிக்கின்றன. இது நீரிழிவுக்கு வழி வகுக்கலாம், எனவே இவற்றை தவிர்க்க வேண்டும்.

4.மனஅழுத்தத்தை குறைக்கவும்: நீண்ட நாள் தொடர்ந்து மனஅழுத்தம் இருந்தால், கணையத்தின் செயல்பாட்டை பாதிக்கும். அதனால் மனஅழுத்தத்தை குறைக்கும் சில நடவடிக்கைகள், உதாரணமாக தியானம் மற்றும் ஆழ்ந்த மூச்சு பயிற்சிகள், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

5.பராமரிப்பு பரிசோதனைகள்: உங்கள் கணையத்தின் சுகாதாரத்தை சரிவர கண்காணிப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக நீரிழிவு உள்ளவர்கள், பரிசோதனைகள் மூலம் தங்களின் சுகாதார நிலையை மதிப்பிட முடியும்.அதனால் நீரிழிவு உள்ளவர்கள், மருத்துவரை அணுகி, நீரிழிவு தொடர்பான பரிசோதனைகளைச் செய்வது அவசியம்.

6.உடற்பயிற்சி

உடற்பயிற்சி எவ்வாறு உதவுகிறது?

உடற்பயிற்சி, நீரிழிவு பாதிக்கப்பட்டவர்களின் இரத்த சர்க்கரையை சரி செய்யவும், உடலில் இன்சுலினின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. உடற்பயிற்சியின் மூலம் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் இன்ஃபிளேமேஷன் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் பீட்டா செல்களின் செயல்பாடு மேம்படும், மற்றும் அவை பாதுகாப்பாக இருக்கும்.

உதாரணமாக, தினமும் குறைந்தது 30-45 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது, நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது, உடல் எடையை சீராக்கி, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எளிய மற்றும் பயனுள்ள உடற்பயிற்சியாகும்.

கணையம் அழற்சி (pancreatitis)மற்றும் மது: ஒரு பார்வை:-

கடுமையான மதுபானம் பருகுதல், கணையம் அழற்சி எனப்படும் அழற்சி நோயை ஏற்படுத்தும் முக்கிய காரணம். மதுவால் உருவாகும் விஷத்தன்மையுள்ள பொருட்கள் பான்கிரியாஸ் செல்களை சேதப்படுத்தி, ஜீரண அமிலங்கள் உட்புறத்தில் சுரக்க வைத்து பான்கிரியாஸ் தன்னைத் தானே ஜீரணிக்க ஆரம்பிக்கிறது. இதனால் அழற்சி ஏற்பட்டு பான்கிரியாஸின் செயல்பாடு மோசமாகிறது.

இந்த நோய் திடீரென ஏற்படும் (acute) அல்லது நீடித்துவைக்கும் (chronic) வகையில் இருக்கலாம். அக்யூட் பான் கிரியாஸ் அழற்சி சில நாட்களில் சரியாகலாம், ஆனால் க்ரானிக் பான்கிரியாஸ் அழற்சி என்பது நிரந்தரமாக பான்கிரியாஸ் சேதமடைந்து நீடித்த வலி, சீரான ஜீரணக் கோளாறு மற்றும் நீரிழிவு நோயைக்கொண்டிருக்கும்.

காரணங்கள்: பித்தக்கல் (அக்யூட் பாங்கிரியாஸ் அழற்சிக்கு முதன்மைக் காரணம்), அதிக மது (க்ரானிக் வகைக்கு முக்கிய காரணம்), மரபணுக்களின் பாதிப்பு, வைரஸ்/பாசிச் சூழல்கள், சில மருந்துகள் மற்றும் பான்கிரியாஸ் புற்றுநோய்.

இதர பின்விளைவுகள்: இரத்த சர்க்கரைக் கட்டுப்பாட்டில் இல்லாமை, எடை இழப்பு, எலும்புத் தேக்கம், பான்கிரியாஸ் புற்றுநோய்,, இதய, நுரையீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு.
சிகிச்சையில் முதன்மையாக மதுவை முற்றிலும் நிறுத்தவேண்டும். உணவுக் கட்டுப்பாடு, மருந்துகள், தேவையான மருத்துவ பராமரிப்பு ஆகியவை தேவைப்படும்.

தடுப்புக்கான வழிகள்:

*மது விலக்கு
*உடல் எடை குறைப்பு
*புகையிலை தவிர்த்தல்
*நீரிழிவு/கொலஸ்ட்ரால் போன்ற நிலைகளை கட்டுப்படுத்தல்.

The post கணையம் காப்போம்… உயிரைக் காப்போம்! appeared first on Dinakaran.

Read Entire Article