
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும், அந்த கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே சித்திரைத் திருவிழாவுக்கு மின்சாரம் வழங்க முடியும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருக்கும் தகவல் அமைச்சருக்கு தெரியுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "2017 வரை 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை இருந்துவந்தது. இந்த நிலையில் சித்திரை திருவிழாவிற்காக ரூ.2 கோடி நிலுவை தொகை நேற்று மாநகராட்சிக்கு செலுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு ரூ.1.5 கோடி நிலுவை தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் சித்திரை திருவிழா பிரச்சினை முடிந்துவிட்டது. கள்ளழகர் பட்டை அணிந்து, ஆனந்தமாக, அழகாக, மகிழ்ச்சியோடு ஆற்றில் இறங்குவார்" என்று தெரிவித்தார்.