
விழுப்புரம்,
விழுப்புரத்தில் 209 பெட்டிகளில் 10,032 போலி மதுபாட்டில்கள் (1,806 லிட்டர்) அமலாக்கப் பிரிவு புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"அமலாக்கப் பிரிவு புலனாய்வுத் துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோத மதுபான வர்த்தகத்தை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமலாக்கப் பிரிவு புலனாய்வு துறை, தமிழகத்தில்கள்ளச்சாராயம், போலி மதுபானம், எரி சாராயம் போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தை மிகவும் உறுதியாக அமல்படுத்தி வருகிறது.
முதன்மையாக, போலி மதுபானம் தயாரிப்பு கூடங்கள், சட்ட விரோதமான மதுபானங்கள் தயாரிக்கும் இடங்கள், போலி மதுபான வர்த்தகம், பிற மாநில மதுபானங்கள் கடத்தல்களை தடுக்க தொடர் கண்காணிப்பு மற்றும் வேட்டைகள் நடத்தி வருகிறது.
அமலாக்கப் பிரிவு புலனாய்வுத் துறை தற்போது மிக நுணுக்கமான நுண்ணறிவு தகவல்களை சேகரித்து,உடனடி மற்றும் தொடர் நடவடிக்கையால் சமீபத்தில் சென்னை, விழுப்புரம், வேலூர், கோயம்புத்தூர் ஆகிய மண்டலங்களில் சட்டவிரோதமாக கடத்தப்படும் மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மத்திய நுண்ணறிவு பிரிவு (CIU) காவல் ஆய்வாளர் தலைமையில் பூத்துறை காவல் சோதனை சாவடி அருகே வாகன சோதனையின் போது ஈச்சர் வாகனம் ஒன்றை நிறுத்தி ஆய்வு செய்தபோது, அதில் போலி மதுபானம் 209 பெட்டிகளில் 10,032 மது பாட்டில்கள் (1,806 லிட்டர்) பறிமுதல் செய்தனர்.
தற்போதைய விசாரணையில், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக,பாண்டிச்சேரியில் இருந்து போலி மதுபானம் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
இவ்வழக்கில் முதன்மையான குற்றவாளி பாண்டிச்சேரியை சேர்ந்த தொடர் குற்றவாளி என தெரிய வந்துள்ளது. அவர்கள் டாட்டா இண்டிகோ வாகனம் ஒன்றை முன்வழி பாதுகாப்பிற்காக பயன்படுத்தியுள்ளனர்.இரண்டு வாகனங்களுடன் போலி மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற சட்டவிரோத மதுபான வர்த்தகங்களை தடுக்கும் நோக்கில், துறை தொடர்ந்து கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.பொது மக்கள் சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான தகவல்களை இலவச தொலைபேசி எண். 10581 அல்லது CUG எண்.9498410581 என்ற எண்ணிற்கு தகவல் வழங்கலாம். வழங்கப்படும் அனைத்து தகவல்களும் ரகசியமாக பாதுகாக்கப்படும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.