அவனியாபுரம்: மதுரை அருகே பெருங்குடியில் ரசாயனம் கலந்த கழிவுநீர் பருகிய 14 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. 70 மாடுகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் தர்மர். இதேபோல் வில்லாபுரம் அசோக், குதிரைகுத்தி பகுதியில் வசிக்கும் அய்யனார், குரண்டியை சேர்ந்த பெருமாள் உள்ளிட்ட ஆறு பேருக்கு சொந்தமான 920 கிடை மாடுகள் உள்ளன. இவற்றை மதுரையை அடுத்த பெருங்குடி மண்டேலா நகர் பகுதியில் உள்ள அறுவடை பணிகள் முடிந்த விவசாய நிலங்களில் நேற்று மேய்ச்சலுக்கு விட்டிருந்தனர்.
இந்த மாடுகளில் சில அப்பகுதியில் சென்ற ரசாயன கழிவுநீரை பருகியுள்ளன. அந்த நீரில் விஷத்தன்மை இருந்ததால், 14 மாடுகள் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 70 மாடுகள் உயிருக்கு போராடின. இதுகுறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் சுப்பையன், உதவி இயக்குநர் சரவணன், நோய்கள் புலனாய்வு பிரிவு டாக்டர் கிரிஜா, அவனியாபுரம் கால்நடை மருத்துவர் பாபு உள்ளிட்ட 18 பேர் கொண்ட குழுவினர் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் இறந்த மாடுகளின் உடல்களை ஆய்வு செய்தனர். பின்னர் அவை அருகிலுள்ள நிலத்தில் புதைக்கப்பட்டன. மேலும், உயிருக்கு போராடும் மாடுகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்ததும் அங்கு மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஏனைய மாடுகள் பாதுகாப்பான வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த மாடுகளுக்கும் மருந்துகள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய்த்துறை சார்பில் தெற்கு தாசில்தார் ராஜபாண்டி, விஏஓ கணேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
The post மதுரை அருகே ரசாயன கழிவுநீர் பருகிய 14 மாடுகள் பரிதாப பலி: 70 மாடுகளுக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.