சென்னை: பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் மதுராந்தகம் ஏரியை தூர்வாரி, சீரமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். வரும் ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: சோழர் காலத்தில் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நான்காண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவடையவில்லை. கன்னித்தீவு கதை போல நீளும் சீரமைப்புப் பணிகளால் கடந்த நான்காண்டுகளாக பயிர் சாகுபடி செய்யமுடியாமல் பெரும் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், இதுகுறித்த அக்கறையும், கவலையும் சிறிதும் இல்லாமல் ஏரி சீரமைப்புப் பணிகளை தமிழக அரசின் நீர்வளத்துறை தாமதப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.