சனி பகவானின் ஆட்சிவீடான, கும்ப ராசியில் இதுவரை சஞ்சரித்துவந்த சூரிய பகவான், குரு பகவானின் ஆட்சி ராசியான மீன ராசியில் வலம் வரும் காலத்தையே “பங்குனி” மாதம் என நாம் கொண்டாடுகிறோம். இம்மாதத்தின் மிக முக்கிய கிரக அம்சம், ஏற்கெனவே மீன ராசியில் அமர்ந்துள்ள ராகுவுடன், சூரியன் இணைவதுதான்! சூரியனும், ராகுவும் ஜோதிடக் கலையின் துல்லிய விதிகளின்படி, நிழல் கிரகமும், அசுர கிரகமுமான, ராகுவின் சஞ்சார நிலையினால், ஏற்படும் மிகக் கடின தோஷங்களை, சூரியனின் சேர்க்கை குறைத்துவிடுகிறது. மேலும், இந்த இணைதல், குரு பகவானின் ஆட்சி வீீடான மீன ராசியில் நிகழ்வது, மிக நல்ல கிரகச் சேர்க்கையாகும்.
“கொடுப்பதிலும், கெடுப்பதிலும் ராகுவிற்கு நிகர் அவரே!” எனக் கூறுகின்றன மிகப் புராதனமான ஜோதிடக் கிரந்தங்கள். இதே தருணத்தில், ராசிக்கு ஏழாம் இடத்தில் கேதுவும் அமர்ந்திருப்பது, நன்மைகளைத் தராது. கேதுவை, “மோட்ச காரகர்” என விவரிக்கின்றன ஜோதிட நூல்கள். மிக முக்கிய இத்தகைய கிரக நிலை, ஒவ்வொருவர் ராசியினருக்கும் விளைவிக்கவிருக்கும் நன்மை தீமைகளை ஆராய்வதற்கு முன், இம்மாதத்தின், முக்கிய புண்ணிய தினங்களை ஆராய்ந்து பார்ப்போம்.
பங்குனி 1 (15-3-2025) – பங்குனி மாதப் பிறப்பு : இன்று, மறைந்த நமது முன்னோர்களுக்கு, (பித்ருக்கள்) தர்ப்பணம், திதி பூஜை, தானம் ஆகியவற்றின் மூலம், பூஜிப்பது ஏழு தலைமுறையினருக்கு நம் குடும்பத்தைப் பாதுகாக்கும். பாபங்கள் நிவர்த்தியாகும். மேலும், இன்று “சம்பத் கௌரி விரதம்” சகலவிதமான சம்பத்துக்களையும் (அஷ்ட-ஐஸ்வர்யங்களையும்) அளித் தருளவல்லதாகையால்தான் சம்பத் கெளரி விரதம் எனும் பெயர் காரணமாயிற்று. இவ்விரதத்தைக் கைக் கொண்டால், பெண்கள் நித்ய சுமங்கலிகளாகவும், அனைத்துவித நற்செல்வங்களையும் பெற்று, இன்பமாக வாழ்வர்.
பங்குனி 8 (22-3-2025) – திரியம்பகாஷ்டமி – இப்புண்ணிய தினத்தில், காலை நேரத்தில் ஸ்ரீ சிவபெருமானையும், பிரதோஷ காலத்தில் கால பைரவரையும் தரிசனம் செய்தால், நெடுங்காலமாக தகுந்த வரன் அமையாமல், இருக்கும் பெண்களுக்கு கணவன் அமைவான். உடல் ஆரோக்கியம் மேம்படும். அநாவசியமான மனப் பிராந்தி பயம் நீங்கி முகமும் மனமும் தெளிவுறும்.
பங்குனி 11 (25-3-2025) – ஏகாதசி விரதம் மற்றும் சிரவணம். இன்று உபவாசமிருத்தல், அனைத்து பாபங்களையும் போக்கி, குடும்பத்தில் இன்பம் பெருகும்.
பங்குனி 13 (27-3-2025) – பிரதோஷம். இன்று, உபவாசமிருந்து, திருக்கோயிலில், மாலையில் தீபமேற்றிவைத்து, இறைவனை தரிசிப்பது, அனைத்து பாபங்களையும் உடனுக்குடன் போக்கி, மகத்தான புண்ணிய பலனையளிக்கும். மேலும் இன்று மாத சிவராத்திரியுங் கூட!
பங்குனி 15 (29-3-2025) – அமாவாசை, பித்ருக்களைப் பூஜிக்கவேண்டிய மகத்தான புண்ணிய தினம். அனைத்து பாபங்களையும், துன்பங்களையும் போக்கி, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். ஏழைகளுக்கு, இன்றைய தினத்தில் தானமளிப்பது, ஏழு தலைமுறைகளுக்கு குடும்பத்தில் லட்சுமி கடாட்சத்தைப் பெற்றுத் தரும்.
பங்குனி 16 (30-3-2025) – யுகாதிப் பண்டிகை. உலகின் கால அளவைக் குறிக்கும். கிருதயுகத்தின் ஆரம்ப தினத்தைக் குறிக்கும் தினம். இன்றைய தினத்தில், பக்தி – சிரத்தையுடன் ஜோதிடர்களை மானசீகமாக வணங்கி, பஞ்சாங்கம் செவிமடுப்பதின் புண்ணிய பலன்களைக் கேட்க வேண்டும். பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களாகிய வாரம் – ஆயுள், ஆரோக்கியத்தையும், திதி – நீங்காத செல்வம் நிறைந்திருக்கும், நட்சத்திரம் முற்பிறவிப் பாபம் விலகும், யோகம் – பசி, பிணியகற்றும், கரணம் – சகல காரியத் தடைகளும் விலகி, காரிய சித்தி பெறுவீர்கள். வசதியுடையவர்கள், வேதம் ஓதிய ஒன்பது பேர்களுக்கு பஞ்சாங்கப் புத்தகம் வாங்கிக் கொடுத்தால் மகத்தான புண்ணிய பலன்களைப் பெறுவீர்கள். மேலும், இன்று “வசந்த பஞ்சமி!” (பங்குனி 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வைரை), இக் காலங்களில், தினமும் மாலை நேரத்தில் நவநாயகியர்களைத் துதித்து, தேவி பாகவதம் பக்தி சிரத்தையுடன் படித்து, கேட்க அம்பாளின் பரம கருணையினால் கல்வி, செல்வம், விவேகம் கலந்த வீரம் அனைத்தையும் ஒருங்கே பெற்று, சகல துறைகளிலும் முன்னேற்றத்துடன்கூடிய – செம்மையான வாழ்க்கையும் பெற்று சுற்றத்தாருடன் கூடியிருந்து மகிழலாம்! இந்நன்னாளில், சந்திர தரிசனம் உத்தமமானது. இந்நாள் தொடங்கி, இம்மாதம் முடிவரையும் வாக்கிலும், அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இதை அனுபவத்தில் காண்பீர்கள். மேலும், இன்றைய சந்திர தரிசனம், உங்களை நோயில்லா நீண்ட நல்வாழ்வுடன்கூடிய, “ஸதாபிஷேகம்” (ஆயிரம் பிறை காணும் பாக்கியம்) கண்டு, சந்ததியர் தழைத்தோங்குவதைக் கண்ணுற்று இன்புறுவீர்கள். மேலும், இன்று புஜகண்ட சித்தரின் அவதாரப் புண்ணிய தினம். சித்தபெருமானை மனத்தளவில் நினைத்து – வணங்கி, உங்கள் வீட்டுப் பூஜையறையில் நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்கினால், அஷ்டமா சித்துக்களைப் பெறும் தகுதியைத் தந்தருள்வார், இம்மகான்.
பங்குனி 17 (31-3-2025) – ஸ்ரீ சௌபாக்கியா கௌரி விரதம் – இந்நன்னாளில் வீட்டில் கலசம் வைத்து, தேவி அம்பாைள ஆவாஹனம் செய்வித்து வழிபட, நவநிதிகளும் உங்கள் இல்லத்தில் நித்திய வாஸம் செய்திட அருள்புரிவாள் அன்னை, மகாசக்தி!
பங்குனி 18 (1-4-2025) – ஸ்ரீ தாராதேவி ஜெயந்தி “தஸமஹா வித்யா நாம மந்திரம்” எனும் சியாமளா ரஹஸ்ய மகா மந்திரங்களில் கூறியுள்ளபடி, உலகை ரட்சிக்கும் ஆதிபராசக்தியானவள், பத்துவிதமான திருஅவதாரங்களில், அருள்பாலித் தருள்கின்றாள்! இந்தப் பத்து திருவவதாரங்கள், திருமாலின் தசாவதாரத்திற்கு இணையான, பராக்கிரமத்தை உடையதாக, மேற்கூறிய மகா மந்திரங்களின் வாயிலாக அறிகின்றோம். திருமாலின் துணை கொண்டு, தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து, திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகால விஷத்தைக் கண்டு, அனைவரும் அஞ்சி ந டுங்கிட, அவர்களின் வாட்டத்தைப் போக்கியருளிய சிவபெருமான் அவ்விஷத்தைத் தானே பருகிட, விஷத்தை தொண்டைக் குழியிலேயே தடுத்து நிறுத்திய மகா சக்தியே இந்தத் தாரா தேவி! ஒருவரின் ஜனன ஜாதகத்தில், ஜன்ம லக்னம் முதற்கொண்டு, சூரியன் உட்பட அனைத்து நவக்கிரகங்களின் தோஷங்களையும் போக்கவல்லது. முக்கியமாக, குருபகவானால் ஏற்படும் தோஷங்களைப் போக்கிடும், அசூயையின் காரணமாக, நம்மீது பொறாமை கொண்ட தொழிற்போட்டியாளர்களாலும், எதிரிகளாலும் ஏவப்பட்ட ஏவல் – பில்லி சூனியங்களை தீயினிற் தூசாக்கிடச் செய்து நம்மைக் காத்தருவாள் அன்னை மகா சக்தி! இன்றைய தினத்தில், ஸ்ரீதேவி பாகவதம் படித்தாலும், கேட்டாலும், நினைத்தமாத்திரத்திலேயே அருள்பாலித்தருளுவாள், பெற்ற தாயைப் போல! அம்பாளின் திருக்கோயிலுக்குச் சென்று, ஒரு மண் அகலில் நெய் தீபம் ஏற்றிவிட்டு வணங்கினால், நம்முடைய ஜனன கால ஜாதகத்தில் ஏற்பட்டு்ள்ள அனைத்துவித தோஷங்களும் பகலவனைக் கண்ட பனிபோல் விலகி, நல்வாழ்வையடைவது திண்ணம்.
பங்குனி 19 (2-4-2025) – பகவான் ஸ்ரீமந் நாராயணன் கூர்ம அவதாரமெடுத்து, அசுரர்களை அழித்து, அவர்கள் கைப்பற்றிய நான்கு வேதங்களையும், மீட்டு, காப்பாற்றி அருளிய பண்ணிய தினம். மேலும், இன்று மகாலட்சுமி பஞ்சமி. மகாலட்சுமியை, செந்தாமரை மலர்கொண்டு அர்ச்சித்து, அந்தணர்களுக்கு போஜனம் செய்வித்தால், நிலையான சொத்துகள் – (உங்களுக்குச் சேரவேண்டிய பரம்பரைச் சொத்து), லட்சுமி கடாட்சத்துடன்கூடிய அஷ்ட ஐஸ்வர்யங்களும், தம்பதியருக்குள் அந்நியோன்யக் மேலோங்கி, நல்மக்கட் செல்வங்களும், மனமகிழ்ச்சியுடன்கூடிய இல்வாழ்க்கை அமையும்.
பங்குனி 20 (3-4-2025) – சஷ்டி விரதம். இன்று உபவாசமிருந்து, முருகப் பெருமானைப் பூஜிப்பது, ஆரோக்கியத்தையும், ஐஸ்வர்யத்தையும், புத்திரப் பேற்றையும் உடனுக்குடன் நல்கும்.
பங்குனி 23 (6-4-2025) – ஸ்ரீராம நவமி. பகவான் ஸ்ரீமந் நாராயணன், உலக மக்களுக்கு தர்ம நெறி முறையின் சக்தியை எடுத்துக்காட்டுவதற்காக, மானிடப் பிறவி எடுத்து, பல துன்பங்களையும் அனுபவித்து, பிறவியில் எத்தகைய இடர்கள் ஏற்படினும், தர்ம நெறி முறைகளிலிருந்து, வழுவாமல் இருக்க வேண்டும் என்பதை, உலகிற்கு எடுத்துக்காட்டிய மகத்தான புண்ணிய தினம். இன்று உபவாசமிருந்து, ஸ்ரீராமபிரானைப் பூஜிப்பதும், ஸ்ரீமத் ராமாயணம் படிப்பதும், 108 தடவைகள் “ஸ்ரீ ராம ஜெயம்”எழுதிவருவதும், அயோத்தி, பத்ராசலம், மதுராந்தகம், வடுவூர் போன்ற திருத்தலங்களுக்குச் சென்று, தரிசிப்பதும், அனைத்து பாபங்களையும் போக்கி, மகத்தான புண்ணிய பலன்களை அளிக்கும். குடும்பம் செழித்தோங்கும். பலருக்கு, புத்திரப் பேறு கிட்டும். இன்று ஸ்ரீ ராமபஜனை செய்வது, அனைத்துப் பாபங்களையும் போக்கும். வசதியுள்ள அன்பர்கள், அயோத்தியா சென்று புண்ணிய நதியான சரயூவில் நீராடி, பரம ஸ்ரீராம பக்தரான அனுமனையும் ஸ்ரீ ராமபிரானையும், தரிசிப்பது மகத்தான புண்ணியத்தைத் தரும்.
பங்குனி 25 (8-4-2025) – புலத்தியரைக் குருவாகக் கொண்டவரும், அஷ்டமா சித்துக்களை கைவரப் பெற்றவரும், தேரையர் பெருமானார் அவதரித்த திருநன்னாள்! கருவூரார், தனது “வாத காவியத்தில்,
“வந்ததோர் தேரையர்தான் மகா சித்தர் நூலில் வல்லோர்,
அந்த நல் அகத்தியருக்கு அருமையாய் வந்த பிள்ளை
குந்தக மில்லா பிரம்ம குலத்தினில் வந்துதித்தோர்
விந்தையாய் காயசித்தி மிகச் செய்து முடித்தார் பாரே!”
இங்ஙனம் எடுத்து இயம்புகிறார், தேரையர் பெருமானை! தோரண மலையில் ஜீவ சமாதி அடைந்து, இன்றளவும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தருள்கிறார், சித்த மகா புருஷர் தேரையர். இம்மலையில் பல இடங்களில் பள்ளங்கள் (அந்தக் காலங்களில் தகுந்த உபகரணங்களும் இல்லாமல், சரியாக வட்டவடிவில் – மழமழவென) இருப்பதை இன்றும் காணலாம். அவைகள் அனைத்தும் அகத்தியர் முதற்கொண்டு அனைத்து பெரும்பாலான சித்த மகா புருஷர்கள் அவ்விடங்களில் நவபாஷாணங்களைத் தயாரிப்பதற்காக மூலிகைகளைப் பொடி செய்தும், அரைத்தும், கஷாயங்களைத் தயாரிக்கவும் பிரத்யேகமாக இம்மலைமீது வடிவமைக்கப் பட்டு்ள்ளதை இன்றளவும் காணலாம். அவசியம் அனைவரும் தோரண மலைக்குச் சென்று, சித்தரின் ஜீவ சமாதியில் நெய் தீபம் ஏற்றி வைத்து, ஒரு சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்துவிட்டு வந்தாலே போதும். நம் துயரங்கள் பறந்தோடும். நம் துயரங்களைச் சொல்லாமலேயே தீர்த்து வைப்பார். நம்மைப் பெற்ற தாய்க்குத் தெரியாதா நமக்கு என்ன தேவை என்று? மேலும், இன்றைய தினம் ஆதிசேஷனின் மறு அவதாரமும், அத்திரி மகரிஷிக்கும், அனுசூயைக்கும் மகனாய்ப் பிறந்தவரும், சப்தரிஷி மண்டலத்தில் அதிபிரகாசமிகுந்த நட்சத்திரமாய் பரிமளிப்பவருமாகிய, பதஞ்சலி முனிவரின் திரு அவதார தினம். உங்கள் வீட்டுப் பூஜையறையில் கோலமிட்டு, பதஞ்சலி முனிவரின் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, இரண்டு மண் அகல் விளக்குகளில் பசு நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்கினால், விஷஜந்துக்களால் உங்களுக்கு யாதொரு தீங்கும் ஏற்படாது.
பங்குனி 27 (10-4-2025) – பிரதோஷம். இன்று மாலை திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று, தீபமேற்றிவைத்து தரிசிப்பது, மகத்தான புண்ணிய பலனையளிக்கும்,
பங்குனி 28 (11-4-2025) – பங்குனி உத்திரம்.
தமிழ் மாதத்தில் (கடைசி மாதமாகிய) 12-வது மாதமாக மலரும், பங்குனியும், 27 நட்சத்தி்ரங்களில் 12-வது நட்சத்திரமாகிய உத்திரமும் ஒருசேர இணைந்து வருகின்ற தினத்தையே “பங்குனி உத்திர”மாகக் கொண்டாடுகிறோம். மேலும், அனைத்து தெய்வத் திருமணங்களும் அரங்கேறிய மாதமும் இம்மாதத்தில்தான்! அன்னை ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீசொக்கநாதரையும், ஸ்ரீ ஆண்டாள் – ஸ்ரீ ெரங்கமன்னாரையும், மிதிலை மாநகரில், ஸ்ரீ சீதாபிராட்டி – ஸ்ரீ ராமரையும், ஊர்மிளை – லட்சுமணனையும், மாண்டவி – பரதனையும், சுருதகீர்த்தி – சத்ருக்கணனையும், கைத்தலம் பற்றிய நாளும் ஸ்ரீமீனாட்சி – ஸ்ரீசொக்கநாதர் திவ்ய தம்பதியராய், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சேவை சாதித்ததும், ஸ்ரீவேலவனை மணந்த ஸ்ரீ வள்ளியின் அவதாரத் தினமும், திருமாலின் திருமார்பை அலங்கரித்த மற்றும் ஸ்ரீமகாலட்சுமியின் அவதாரத் தினமும், மாத்ருகாரகரான சந்திரன், தட்சனின் மகள்களாகிய 27 பெண்களையும் மணந்த தினமும், தேவேந்திரன் இந்திராணி, நான்முகக்கடவுளான பிரம்மதேவன் சரஸ்வதியை மணம்புரிந்த நன்னாளும், மன்மதன், சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டதும், ரதிதேவியாரின் பிரார்த்தனைக்கு இணங்கி மன்மதனை அவள் கண்களுக்கு மட்டும் தெரியும்படி உயிர்ப்பித்த நன்னாள். பல திருக் கோயில்களில், பித்ருகாரகரான சூரியபகவான், தனது கிரணங்களின்மூலம் சிவபெருமானை வழிபடுவது அனைவரும் அறிந்ததே! ஆனால், திங்களூர் (திருவாரூர்) சிவாலயத்தில், பங்குனி உத்திரத் திருநாளில் சந்திரன் வணங்கும் நிகழ்வு இன்றளவும் வெகு விமரிசையாக நடைபெறுவதைக் காணலாம். இந்நன்னாளில் விரதமிருந்து இறைவனை வாயினால் பாடி, மனத்தினால் சிந்திப்போர்க்கு, நினைத்த காரியம் நிறைவேறும்; தோஷங்்களனைத்தும், சந்தோஷங்களாக மாறும் வாக்கு பலிதமாகும்; இறைநிலைக்கு மேலோங்கி, அனைத்து ஜீவராசிகளுக்கும் இரங்கி அருளுவர்.
ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் தரிசனம் ஈடிணையற்ற புண்ணிய பலனையளிக்கும். இம்மையில், மகிழ்ச்சியும், மனநிறைவும் அளிக்கும் மகத்தான இப்புண்ணிய தினங்களில் பகவானைப் பூஜித்து, நமது குடும்பமும், குழந்தைகளும் நல்வாழ்வு பெறுவோம். கோயில்களில் நடைபெறும் “சேர்த்தி உற்சவத்”தைத் தரிசிக்கும் அனைவருக்கும் கணவர், மனைவியரிடையே அந்நியோன்யம் மேம்படும் அந்நியோன்யக் குறைவினால் நெடுங்காலம் பிரிந்திருந்த தம்பதியினர் மீண்டும் ஒன்றுசேர்ந்து குதூகலிப்பர். மேலும், இன்று லட்சுமி நரசிம்மர் அவதரித்த திதி. இன்றைய தினத்தில், கோலமிட்டு லட்சுமி நரசிம்மர் திருவுருவப் படத்தை எழுந்தருளிச் செய்து நெய் தீபம் ஏற்றிவைத்து, பானகம் அமுது செய்வித்து, துளசி தளத்தினால் அர்ச்சிக்க, சகலவித நன்மைகளும் உங்களை வந்தடைவது உறுதி. தேவை நம்பிக்கையும், உள்ளன்புடன் கூடிய பக்தி மட்டுமே!
பங்குனி 29 (12-4-2025) – பௌர்ணமி விரதம் – மனோகாரகரான சந்திரன், முழுநிலவு பௌர்ணமிக் காலங்களில் பலவீனமான மனித மனம் சஞ்சலத்திற்குள்ளாகும். அந்நேரம், மனப் பாதிப்பு – வேகத்துடன் கூடிய விவேகமில்லாத தன்மை உடையவர்களாக மாறிவிடுவது வாடிக்கை! இந்நாட்களில் உபவாசமிருந்து, முழுநிலவைத் தரிசித்த பிறகு, சத்திய நாராயண பூஜை செய்வித்தால், கேட்ட வரங்களைத் தந்தருளி, மனித மனக்கிலேசங்களை நீக்கி, சகல – அஷ்ட ஐஸ்வர்யங்களுடன்கூடிய நல்வாழ்வை நல்குவதாக “சத்தியப் பிரமாணம்” செய்திருப்பதாலேயே அவருக்கு “ஸ்ரீ சத்தியநாராயணன்” என்ற பெயர்க் காரணமாயிற்று. வாசக அன்பர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்து சகல சம்பத்துக்களையும் அடையவேண்டுமாய் பிரார்த்திக்கின்றோம்.
இனி, ஒவ்வொரு ராசியினருக்கும், இப்பங்குனி மாதத்தில் கிரகங்கள் அனைவரும், அளிக்கவிருக்கும் பலா – பலன்களை மிகத் துல்லியமாக ஆராய்வோம். அன்றாட வாழ்க்கையில் தன்னிகரற்ற வழிகாட்டி, உதவும் “ேஷாடஸ ஸதவர்க்கம்” எனும் மிகப் புராதன வானியல், ஜோதிட கணித முறை. வேதகால மகரிஷிகள், நமக்கு, பரம கருணையுடன் அளித்துள்ள தன்னிகரற்ற வரப்பிரசாதம், இக்கணித முறை!!
நம்மீது அப்பெரியோர்கள் கொண்டிருந்த அளவற்ற அன்பிற்கும், பாசத்திற்கும், கருணைக்கும், என்ன கைம்மாறு செய்ய முடியும் நம்மால்….? அவர்கள் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திக்கை நோக்கி, இருகரங்கள் கொண்டு வணங்குவதைத் தவிர….? நம்மால் யாதொரு பிரதியுபகாரமும் செய்ய முடியாது!
The post பாங்காக அமையுமா, பங்குனி மாதம்? appeared first on Dinakaran.