ப்ரக்ஞாபுர நிவாஸினம் அக்ஞானோபாதி நாஸகம் I
ஸுக்ஞான ஸம்ப்ரதாயகம் ஸமர்த்த தேஸிகம்ஸ்ரயே II
ப்ரக்ஞாபுரம் என்ற அக்கல்கோட்டில் எப்பொழுதும் வசிப்பவரும் அஞ்ஞானமாகிய உபாதியை அழிப்பவரும் உயர்ந்த ஞானத்தை ஆசீர்வதித்து வழங்குபவருமான ஸமர்த்த குருநாத பகவானை வணங்கு கிறேன் என்பது தத்தாத்ரேய சுவாமிகள் ஸமர்த்தருக்கு எழுதிய ஸ்லோகம்.ஆதி குரு தத்தாத்ரேயரின் இரண்டாவது அவதாரமான ஸ்ரீ நரசிம்ம ஸரஸ்வதி ஸ்ரீசைலம் கதலிவனத்தில் சமாதி நிலையில் இருந்தார்.
கிட்டதட்ட நூறு ஆண்டுகளுக்கு மேலாக புற்று போன்று வளர்ந்த சமாதியில் தற்செயலாக ஒரு விறகுவெட்டியின் கோடாரி அதன்மேல் விழுந்துவிட அக்கோடாரியில் இரத்தக்கறை இருந்தது கண்டு அதிசயமடைந்தார். அப்போது அப்புற்றிலிருந்து, ‘இதுதான். கடவுளின் விருப்பம்’ என்று தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர் தான் அக்கல்கோட் ஸ்ரீஸ்வாமி ஸமர்த்தர். இந்நிகழ்ச்சி சித்திரை மாதம் சுத்த துவிதியை அன்று நடைபெற்றதால் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை ஸ்ரீஸ்வாமி ஸமர்த்தரின் ‘பிரகடனதின’மாக (வெளிப்பாடு தினம்) பக்தர்கள் கொண்டாடிவருகின்றனர்.
ஸ்வாமி ஸமர்த்தரிடம் ‘நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்’ என்று ஒரு பார்சி பக்தர் கேள்வி கேட்டார். அப்போது ஸமர்த்தர், ’நான் முதலில் கதலிவனத்தில் என் பயணத்தை தொடங்கினேன். பல இடங்களில் சுற்றித் திரிந்து அக்கல்கோட் வந்தடைந்தேன். இங்கு வந்த பின்பு நான் எங்கும் செல்லவில்லை’ என்று கூறினார்.
இமயமலை முதல் கன்னியாகுமரி, இராமேஸ்வரம் வரை பயணம் செய்த அவரை சிலர் ‘சஞ்சல பாரதி’ (அலைந்து கொண்டிருக்கும் ஸ்வாமி) என்று அழைக்கத் தொடங்கினர்.
தமிழ்நாட்டிற்கு ஸமர்த்தர் விஜயம் செய்த சமயம் காஞ்சிபுரத்தில், காஞ்சிபுரம் சிவகாஞ்சியா, விஷ்ணுகாஞ்சியா என்ற பிரச்னை நடந்துகொண்டிருந்தது. அங்கேயுள்ள ஒரு கல்வெட்டை ஆதாரம் காட்டி சைவர்களுக்கு கிவகாஞ்சி, வைஷ்ணவர்களுக்கு விஷ்ணுகாஞ்சி என்று ஏற்படுத்திக் கொடுத்ததாக சமர்த்த லீலாம்ருதம் கூறுகிறது.
தென்கோடியில் உள்ள இராமேஸ்வரத்திற்குச் சென்று கோடி தீர்த்தத்தில் ஸமர்த்தர் நீராடச் சென்றபோது அங்குள்ளவர்கள் நீராடுவதற்கு காசு கேட்டனர். அதற்குச் ஸமர்த்தர் தம்மிடம் இல்லையென்று கூற அங்குள்ளவர்கள் ஸமர்த்தரை அனுமதிக்க மறுத்தனர். ‘எந்த புண்ணியம் இங்கு இருக்கிறதோ அது இனி இங்கிருக்காது’ என்று கூறிவிட்டு வந்தார் ஸமர்த்தர். சில நாள்களில் கோடி தீர்த்தத்தின் புண்ணியம் குறையத் தொடங்கியது. அங்குள்ளவர்கள் சிருங்கேரி பீட ஸ்வாமிகளிடம் முறையிட, ஸ்வாமிகளின் வழிகாட்டு தலின்படி மன்னிப்புக் கோருவதற்காக ஸமர்த்தரை இராமேஸ்வரம் முழுவதும் தேடினர். ஆனால் ஸமர்த்தர் இராமேஸ்வரம் மூல ஜோதிர்லிங்கமான ஸ்ரீ ராமலிங்கத்திலிருந்து தோன்றினார். அதிசயமாக அனைவரும் பார்க்க “என்ன சிருங்கேரி ஸ்வாமிகளைப் பார்த்தீர்களா” என்று கேட்டு, கோடி தீர்த்தத்தின் புண்ணியத்தை மீண்டும் கொடுத்து அருளினார்.
‘‘ஈசனுக்கு இழைத்த குற்றம் தேசிகன் எண்ணித் தீர்க்கும்
தேசிகற்கு இழைத்த குற்றம் குரவனே தீர்ப்பதன்றிப் பேசுவது என்?’’
‘கடவுளுக்குச் செய்த குற்றத்தை குருவே ஆராய்ந்து தீர்க்க வல்லவர் ஆவார். ஆனால், குருவிற்குச் செய்த குற்றத்தை அக்குருவே நீக்குவது அல்லால் வேறு ஒருவராலும் நீக்க முடியாது’ என்று திருவிளையாடற் புராணம் கூறும்.
இன்னும் பலபல அற்புதங்கள். ஸ்வாமிகளின் வார்த்தைகளில் கூற வேண்டுமெனில், ‘‘பார்ப்பதற்கு வேடிக்கையும் உண்ண விருந்தும் வேண்டுமென்றால் வரலாம்” என்று தாம் செய்யும் அற்புதங்களைக் குறித்து ஸமர்த்தர் அடிக்கடி சொல்வார். ஸமர்த்தர் அருளிய அற்புதங்களையும் அவர்தம் வாழ்க்கை வரலாற்றையும் தொகுத்து தமிழில் திருமதி. மாதங்கி பாலாஜி ‘அக்கல்கோட் ஸ்ரீஸ்வாமி ஸமர்த்த லீலாம்ருதம்’ என்னும் அற்புதமான நூலை எழுதியிருக்கிறார்.
‘‘ஈஸ்வரோ குருர்
ஆத்மேதி மூர்த்தி பேத விபாகினே I
வ்யோமவத் வ்யாபத தேஹாய தக்ஷிணாமூர்த்தயே நம: II’’
‘‘ஆகாயம் போல அகண்டமான ரூபம் உடையவராயினும் ஈஸ்வரன், குரு, ஆத்மா என்று மூன்று வடிவங்களில் தோன்றும் தட்சிணாமூர்த்திக்கு வணக்கம்’’ என்பது தட்சிணாமூர்த்தி ஸ்லோகம். இதன்படி பரிபூரணமடைந்த மஹான்கள் ஒவ்வொருவரும், தெய்வீக அவதாரங்கள் ஒவ்வொருவரும் இடையறாது ஒன்றுபட்ட நிலையில் தான் இருப்பார்கள்.
மேலைச் சமயத்தின் ஆன்மிக மரபின் அடிப்படைகளைக் கூறும் நூல்களின் தொகுப்பு ஃபிலோகாலியா (Philokalia) என்று அழைக்கப்படும். இது உள்முகப் பிரார்த்தனை ஞானமரபு என்றும் குறிப்பிடப்படுப்படுகிறது. ஃபிலோகாலியாஎன்னும் கிரேக்கச் சொல்லிற்கு ‘அழகின் அன்பு ’ (love of the beautiful) என்று பொருள். அதாவது தெய்வீக அனுபவம் அல்லது தெய்வீக தரிசனத்தை அடைவதாகும்.
‘‘மகான்கள் அனைவரும் புனித ஆத்மாவினால் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு மனிதன் எவ்வளவுதான் இறைவன் மீதும் மகான்கள் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தாலும் கூட, அவன் காலத்தால்அருகில் இருக்கும் அதாவது தம் கண்முன்னே உள்ள மகான்களோடு தன்னை இணைத்துக் கொள்ளவில்லையாயின் முந்தைய மகான்களின் பரம்பரையோடு தன்னை இணைத்துக் கொள்ள இயலாது என்று புனித சிமியோன் தன்னுடை ஃபிலோகாலியாவில் குறிப்பிடுகிறார்’’ என்பார் ஆச்சார்யா. E. பரத்வாஜா.அவ்வகையில் மகான்கள் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்திருந்தாலும் அவர்களுடைய எல்லாச் செயல்களையும் ஒருவருக்கொருவர் அறிந்திருந்தனர். ஸாயிநாதரும் தம்மைப் பல மஹான்களோடு ஒன்றுபடுத்தியே பல செயல்களை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1878 ஆம் ஆண்டில் அக்கல்கோட் மஹாராஜ் மஹாசமாதி அடைவதற்கான நேரம் நெருங்கியபோது, தார்தேவ் என்னுமிடத்தைச் சேர்ந்த கேசவ் நாயக் என்னும் பக்தர், ஸமர்த்தரிடம் கண்களில் கண்ணீர் மல்க, ‘மஹாராஜ் நீங்கள் இல்லாவிட்டால் எங்களுக்கு ஏது கதி’ என்று கேட்டார். எனது அவதாரம் சீரடியில் ஏற்படப்போகிறது. அங்கே எப்போதும் செல். அவரிடம் பக்தி யுடன் இரு. அவ்வாறு செய்தால் நான் இல்லையென்று துன்பப்பட மாட்டாய். மகிழ்வுடன் இருப்பாய்” என்றார் ஸமர்த்தர்.
ஸமர்த்தரின் மஹாசமாதிக்குப் பிறகு கேசவ் நாயக்கும், அவரது மகன் ராமச்சந்திர நாயக்கும் வேறு இரண்டு மனிதர்களுடன் சீரடி சென்றனர். போகும் வழியில் வேறு இரண்டு மனிதர்களும் பாபா ஒரு முஸ்லீம், பைத்தியகார ஃபக்கீர் அவரை வணங்கக் கூடாது என்று பேசிக்கொண்டே சென்றனர். பாபாவை சந்தித்த போது கேசவ் நாயக்கிடம், பாபா ‘‘நீயும் உன் மகனும் என்னை வந்து பார்க்கலாம். மற்ற இருவருக்கும் அனுமதியில்லை’’ என்றார்.
பின்னர் பாபா கேசவ் நாயக்கிடம் வேப்பிலை கொண்டு வரச் சொன்னார். அவ்வேப்பிலைகளை நான்கு பேரிடமும் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். கேசவ் நாயக்குக்கும் அவரது மகனுக்கும் வேப்பிலைகள் இனிப்பாகவும், மற்ற இருவருக்கும் வழக்கத்தை விட மிகுந்த கசப்பாகவும் இருந்தன. இவ்வாறு பாபா பதரிலிருந்து தானியத்தை பிரித்தெடுத்து ஸமர்த்தர் கூறியபடி, தாம் அவர்களது முந்தைய குருவின் தோற்றமே என்பதை உறுதிப்படுத்தினார்.
பம்பாயைச் சேர்ந்த ஹரிச்சந்திர பிடாலேயின் மகன் வலிப்பு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். தாஸ்கணுவின் அற்புதமான பாபா கீர்த்தனைகளைக் கேட்டும், மற்றவர்கள் மூலமாகவும் தன் மகனை சீரடிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டார் பிடாலே. அங்கு பாபாவைப் பார்த்த நேரத்திலிருந்து பையன் படிப்படியாக குணமடைந்தான். பிடாலே பாபாவின் கால்களைப் பிடித்துவிட்டவாறே நன்றி தெரிவித்து தம் ஊருக்குச் செல்ல அனுமதி கேட்டார். அதற்குப் பாபா ‘‘நம்பிக்கையும் பொறுமையும் உடையோரை ஹரி காப்பாற்றுகிறார்” என்று சொன்னார். மேலும், பிடாலேயை தனியே அழைத்து, ‘‘பாபு! நான் உனக்கு முன்பே இரண்டு ரூபாய் கொடுத்திருக்கிறேன். இப்போதும் மூன்று ரூபாய் தருகிறேன். இதை உனது பூஜையறையில் வைத்து வழிபடு. விரைவில் நீ நன்மையடைவாய்’’ என்று கூறினார். பிடாலே அந்தப் பணத்தையும் உதியையும் ஆசிகளையும் பெற்றுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்.
சீரடி வந்து பாபாவை தரிசனம் செய்ததையும், பாபாவின் அருளால் தன் மகனின் நோய் சரியானதையும் நினைத்துப் பார்த்து தாம் எவ்வளவு புண்ணியசாலி என்று எண்ணிக்கொண்டே சென்றார். ஆனால், முன்பே இரண்டு ரூபாய் கொடுத்திருப்பதாக பாபா சொன்னதன் பொருள் அவருக்கு விளங்கவேயில்லை. ஏனென்றால் இதுவே அவர்களின் முதல் சீரடிப் பயணம். பிடாலே தம் அன்னையிடம் வந்து தமக்கு நடந்த அனைத்தையும் கூறினார். இரண்டு ரூபாய் பற்றி சொன்னதும் அன்னையும் ஆச்சரியமடைந்தார்.
பின் நிதானமாகச் சிந்தித்தபோது ஒரு நிகழ்வு நினைவிற்கு வந்தது. ‘பிடாலே, நீயும் உன் மகனும் சீரடிக்குச் சென்றது போல உனது தந்தை நீ சிறு குழந்தையாக இருந்தபோது அக்கல்கோட் மஹராஜ் ஸ்வாமிகளைச் சந்தித்தார். அப்போது அந்த ஸ்வாமி உன் தந்தையை ஆசீர்வதித்து இரண்டு ரூபாய் கொடுத்து பூஜை அறையில் வைத்து வழிபடச் சொன்னார். உனது தந்தையும் தம் இறுதிக்காலம் வரை அதனை முறைப்படி பூஜித்து வந்தார். பின் பூஜை செய்வது நின்று போய்விட்டதால் எப்படியோ அந்த ரூபாய் தொலைந்துவிட்டது.
இப்போது அதே மஹராஜ் தான் பாபா வடிவில் தோன்றியுள்ளார். இதனைப் புரிந்து கொள்வதற்காகவே உனக்கு மேலும் மூன்று ரூபாய் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பியிருக்கிறார்’’ என்று கூற பிடாலே மிக்க மகிழ்ச்சியடைந்தார். மஹான்கள் தமது பக்தர்களை மட்டுமல்ல, அவர்களது குழந்தைகளையும் தொடர்ந்து ஆசீர்வதித்து அருள்புரிகிறார்கள் என்பதை இந்நிகழ்ச்சியின் மூலம் அறியலாம்.
தாணாவைச் சேர்ந்த ஸ்ரீதர் நாராயண் கார்க்கார், தாம் நோயுற்றிருக்கும்போது பாபாவின் படமும் உதியும் கிடைக்கப் பெற்றார். அப்படிக் கிடைத்த மறுநாளே அவர் குணமடைந்தார். பாபாவின் படத்தை அக்கல்கோட் மஹராஜ் படத்தின் பக்கத்தில் வைக்காமல் பாபா முஸ்லீம் என்று நினைத்து சிறிது தூரம் தள்ளி வைத்தார். அன்றிரவு கனவில் பாபாவைப்போல உடையணிந்த ஒரு ஃபக்கீர், நண்பரும் அவரும் அமர்ந்திருந்த வராந்தாவை நோக்கி வருகிறார். அப்போது கார்க்கார் எழுந்து அவரை வணங்கி நின்றார். உடனிருந்த நண்பர், ‘இந்த ஃபக்கீர் அக்கல்கோட் ஸ்வாமியினின்று வேறுபட்டவர் அல்லர்’ என்று கூறினார். மறுநாள் காலை கார்க்கார் பாபாவிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு ஸமர்த்தரின் படத்திற்கருகில் பாபாவின் படத்தை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்தார்.
இவ்வாறு ஸமர்த்தரும் ஸாயிநாதரும் தாங்கள் இருவரும் வேறுபட்டவர்கள்அல்லர். ஒருவரே என்று இன்னும் பல நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துக் காட்டி இன்றும் அருள்புரிந்து வருகின்றனர். பிடாபுரம் ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் சந்நிதியில் ‘தாய்’ என்று ஸ்ரீபாதரால் அடையாளம் காட்டப்பட்ட அன்னை ஸ்ரீமதி. மஞ்சரி, காஞ்சிபுரம் திருப்புலிவனம் கிராமத்தில் ‘ஸ்ரீஸ்வாமி ஸமர்த்த மஹராஜ் ஸ்ரீகுரு தத்த பாதுகா க்ஷேத்ர’த்தை ஸமர்த்தரின் அருளால் அமைத்திருக்கிறார். ஸமர்த்தரின் விஸ்வரூபக் காட்சியாக அந்த ஆலயம் அமைந்துள்ளது ஸமர்த்தரின் அருள்லீலை. உங்கள் குரு யாராக இருந்தாலும் அவர்கள் மற்ற அவதாரங்களிலிருந்து வேறல்லர் என்பதை நாம் அறிந்து கொண்டு குரு வழிபாட்டைச் செய்வோமானால் குருவின் அருள் பரிபூரணமாகக் கிட்டும் என்பது திண்ணம்.
‘‘யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்’’
– என்பது சித்தாந்த சாத்திரத்தில் சிவஞான சித்தியார் வாக்கு.
அவ்வருள் வாக்கின்படியே ‘‘யாதொரு குரு கொண்டு வழிபட எல்லாக் குருமார்களின் அருளும் நமக்கு கிட்டும்” என்பதாகும். சாயி சரணம்.
முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்
The post ஸமர்த்தரும் ஸாயிநாதரும் appeared first on Dinakaran.