புதுடெல்லி: அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கையால் டெல்லி அரசுக்கு ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டதாக அம்மாநில சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொது கணக்குக் குழு (சிஏஜி – CAG) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால், அமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பண மோசடி வழக்குகள் பதியப்பட்டன. இதன் காரணமாக, திகார் சிறையில் கேஜ்ரிவால் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர் முதல்வர் பதவியை ராஜினமா செய்தார்.
இதையடுத்து, புதிய முதல்வராக அதிஷி பொறுப்பேற்றார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு முக்கிய பேசுபொருளாக இருந்தது. ஆம் ஆத்மிக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கு இது முக்கிய காரணமாக அமைந்தது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வராக பதவியேற்ற ரேகா குப்தா இன்று மாநில சட்டப்பேரவையில் சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், “2021-22-ல் கலால் கொள்கை பலவீனமான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டதாலும், பலவீனமான முறையில் செயல்படுத்தப்பட்டதாலும் அது தோராயமாக ரூ.2,002 கோடி வருவாய் இழப்பை அரசுக்கு ஏற்படுத்தியது.
கலால் கொள்கையானது கள்ள மதுபான விற்பனையை ஒழிப்பதையும், கள்ளச்சாராயம் கடத்தலைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், அதை உறுதிப்படுத்தும் வகையில், மதுபான சோதனை ஆய்வகங்களை அமைப்பது, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியை நியமிப்பது, தர உறுதிப்பாட்டுக்கான சோதனையை கடுமையாக்குவது, ஒழுங்குமுறை போன்ற கொள்கையில் திட்டமிடப்பட்ட முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
உரிமங்களை வழங்குவதில் மிறல்கள் நடந்துள்ளன. கலால் கொள்கையை மேம்படுத்துவதற்காக நிபுணர் குழு அளித்த புரிந்துரைகளை அப்போதைய துணை முதல்வரும், கலால் அமைச்சருமான மணீஷ் சிசோடியா புறக்கணித்துள்ளார். நகராட்சி வார்டுகளில் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு சரியான நேரத்தில் அனுமதி வழங்கப்படாததால் ரூ.941.53 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மறு டெண்டர் விடுவதில் துறை தவறியதால் சுமார் ரூ.890.15 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கோவிட் தொற்றுநோய் காரணமாக கடைகளை மூடுவதில் “முறையற்ற முறையில்” விலக்கு அளித்ததால் ரூ.144 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2022-ல் பாலிசி காலாவதியாகும் முன்பே 19 மண்டல உரிமதாரர்கள் தங்கள் உரிமங்களை ஒப்படைத்துள்ளனர். மார்ச் 2022-ல் 4 பேரும், மே 2022-ல் 5 பேரும், ஜூலை 2022-ல் 10 பேரும் இவ்வாறு உரிமங்களை ஒப்படைத்துள்ளனர். எனினும், இந்த மண்டலங்களில் சில்லறை விற்பனையாளர்களை இயக்க கலால் துறையால் மறு டெண்டர் செயல்முறை எதுவும் தொடங்கப்படவில்லை. இதன் விளைவாக, சரணடைந்த சில மாதங்களுக்கு இந்த மண்டலங்களிலிருந்து உரிமக் கட்டணமாக கலால் வருவாய் எதுவும் திரட்டப்படவில்லை. பலவீனமான கொள்கை கட்டமைப்பு முதல் கொள்கையை சரியாக செயல்படுத்தாதது வரை பல சிக்கல்கள் காரணமாக தோராயமாக ரூ.2,002.68 கோடி அளவில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மதுபான கொள்கையால் டெல்லி அரசுக்கு ரூ.2,000 கோடி இழப்பு: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.