முன்பதிவு பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்பே பயணத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

2 hours ago 1

நெல்லை: ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகள், பயணத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே தங்கள் பயணம் குறித்த தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே கேட்டு கொண்டுள்ளது. பாதுகாப்பான பயணம் என்ற அடிப்படையில் பலரும் ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொண்டு குறிப்பிட்ட நாளில் தாங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு பயணிகள் பயணித்து வருகின்றனர். சில சமயங்களில் ரயில்கள் ரத்து அல்லது ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம் உள்ளிட்ட தகவல்களை சில பயணிகள் சரிவர கவனிப்பதில்லை. அதற்காக அனுப்பப்படும் குறுஞ்செய்திகளையும் கண்டு கொள்வதில்லை. ரயில் நிலையங்களுக்கு வந்து சிலர் ஏமாற்றத்தோடும், சிலர் ரயில்களில் ஏறிய பின்னர், மாற்றுப்பாதையில் ரயில் செல்கிறதே என கூறி புலம்புவதும் வாடிக்கையாக வருகிறது. எனவே பயணிகள் தங்கள் பயணங்களுக்கு 4 மணி நேரத்திற்கு முன்னரே ரயில்கள் குறித்த விபரங்களை முழுமை செய்து கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே கேட்டு கொண்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களில் பயணிகள் அமரும் இடத்தின் தன்மைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அட்வான்ஸ் ரிசர்வேஷன் காலம் முன்பு 120 நாட்களாக இருந்தது. இப்போது அது 60 நாட்களாகக் குறைக்கப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் அமலில் உள்ளது. ரயில் முன்பதிவு மற்றும் பயண திட்டங்களில் சில மாற்றங்கள் எப்போது வேண்டுமானாலும் ரயில்வேயால் அறிவிக்கப்படலாம். ரயில் முன்பதிவுகளில் ஏற்படும் மாற்றங்களை பயணிகள் அவ்வப்போது கவனித்து கொள்ள வேண்டும்.

தங்கள் இருக்கை உறுதிசெய்யப்பட்ட பயணிகள் தங்கள் பெர்த்(இருக்கை) எண்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், இறுதி அட்டவணைக்குப் பிறகு குறைந்தபட்சம் 4 மணிநேரம் முன்னதாகவே அவற்றை உறுதி செய்து கொள்ள வேண்டும. ரயில் புறப்படுவதற்கு முன் மற்றும் அந்த ரயில் குறித்த எஸ்எம்எஸ் விபரங்கள் பயணிகளுக்கு வந்து சேரும். பயணிகள் தங்களுடைய ரயில் பயணத்தில் இருக்கை மாற்றங்கள், குறிப்பாக ரயில் அமைப்பில் மாற்றங்கள், வழக்கமான ரேக்குகளை எல்ஹெச்பி ரேக்குகளாக மாற்றுதல், ரயில் சேவைகளில் மாற்றங்கள் மற்றும் பகுதி தூரம் ரத்து செய்தல் ஆகியவற்றை பயணத்திற்கு முன்பாக கவனித்தல் அவசியம். இறுதி அட்டவணை தயாரான பிறகு இருக்கை விவரங்களைச் சரிபார்க்க, பயணிகள் பிஎன்ஆர் நிலை விசாரணை அம்சத்தை www.irctc.co.in அல்லது www.indianrail.gov.in அல்லது ஹெல்ப்லைன் 139ஐ பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

புறப்படும் மற்றும் செல்லும் நிலையங்களில் தொந்தரவில்லாத பயணத்தை உறுதி செய்வதற்காக, பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே உறுதிசெய்யும் இந்திய ரயில்வேயின் எஸ்எம்எஸ் அறிவிப்புகளைப் பார்க்க அறிவுறுத்தப்படுகின்றனர். ஐஆர்சிடிசி அல்லது பிற அதிகாரப்பூர்வ ரயில்வே இணையதளங்களில் பிஎன்ஆர் விசாரணை அம்சத்தைப் பயன்படுத்தி பயணிகள் தங்களுடைய பயணத்திட்டத்தை வகுத்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முன்பதிவு பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்பே பயணத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article