பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே மணல் கொள்ளை பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்ததால், மின்சாரம் பாய்ச்சி திமுக பிரமுகரின் மகன் கொலை செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த குண்டலப்பல்லி ஊராட்சிக்குட்பட்ட பண்டலதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(50). ஒன்றிய திமுக அவைத்தலைவராகவும், ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இவரது 3வது மகன் பிரசாந்த்(20), அதே பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.
கடந்த 12ம் தேதி காலை நிலத்திற்கு சென்ற பிரசாந்த் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் தந்தை சீனிவாசன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில, நேற்று காலை அதேபகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் பிரசாந்த் பம்ப் செட் ஓரம் தலையில் அடிபட்டு கால்களில் கம்பிகள் சுற்றப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து பேரணாம்பட்டு போலீசார், உடலை கைப்பற்ற முயன்றபோது உறவினர்களும், பொதுமக்களும் முற்றுகையிட்டு சடலத்தை தர மறுத்தனர்.
மேலும், பிரசாந்த்தை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளனர். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பேரணாம்பட்டு- வீ.கோட்டா சந்திப்பு சாலையில் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஏடிஎஸ்பி பாஸ்கரன், குடியாத்தம் டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும போலீசார், வட்டாட்சியர் வடிவேல் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ‘திமுக ஒன்றிய அவைத்தலைவர் சீனிவாசன் மற்றும் அவரது மகன் பிரசாந்த் ஆகிய இருவரும் மணல் கொள்ளை, கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை மற்றும் திருட்டு சம்பவங்கள் குறித்து பேரணாம்பட்டு போலீசில் புகார் கொடுத்து வந்தனர். இதுசம்பந்தமாக கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. ஒரு சிலர் வீட்டின் முன்பு கத்திகளை கொண்டு வந்து மிரட்டியும் சென்றுள்ளனர்.
எனவே, பிரசாந்த் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்’ எனக்கூறினர். அதற்கு ஏடிஎஸ்பி பாஸ்கரன் கூறுகையில், ‘டிஎஸ்பி தலைமையிலான ஒரு குழு அமைத்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஆந்திரா, கர்நாடகா செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post மணல் கொள்ளை குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் திமுக பிரமுகரின் மகன் மின்சாரம் பாய்ச்சி கொலை appeared first on Dinakaran.