ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே செம்மளபாளையம் வாய்க்கால் மேட்டை சேர்ந்த குமார் மனைவி ஜோதிலட்சுமி (46). இவருக்கு முருங்கத்தொழுவு பொன் சடச்சி அம்மன் கோயில் அருகே 80 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இதற்கு அருகில் முருங்கத்தொழுவு சூளை புதூரை சேர்ந்த தங்கவேல் (65) என்பவருக்கு சொந்தமான நிலமும் உள்ளது. இந்நிலையில், தங்கவேல் நேற்று முன்தினம் ஜோதிலட்சுமி இடத்திற்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் டிராக்டரில் மண் எடுத்து சென்றார். இதைப்பார்த்த ஜோதிலட்சுமி, தங்கவேல் ஓட்டி வந்த டிராக்டரை தடுக்க முயன்றார்.
இதையடுத்து, தங்கவேல் டிராக்டரில் இருந்த மண்ணை அங்கேயை கொட்டிவிட்டு, ஜோதிலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். மேலும், டிராக்டரை தடுக்க முயன்ற ஜோதிலட்சுமி மீது டிராக்டரை மோதி அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து ஜோதிலட்சுமி நேற்று சென்னிமலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தங்கவேல் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மணல் கடத்தலை தடுத்த ஆத்திரத்தால் தங்கவேல், ஜோதிலட்சுமி மீது டிராக்டரை மோதி செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post மணல் கடத்தலை தடுத்த பெண்ணை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி: வீடியோ வைரல் appeared first on Dinakaran.