சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து செய்தியில்: உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு எனது உழைப்பாளர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஏராளமான, இந்தியாவுக்கே வழிகாட்டும் பல தொழிலாளர் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் ஸ்விகி, சோமாட்டோ, அமேசான் பொருட்கள் விநியோக பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக கிக் தொழிலாளர்கள் நலவாரியமும் உருவாக்கப்பட்டது. இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல், உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், நீங்கள் இழப்பதற்குக் கை விலங்குகளைத் தவிர எதுவுமில்லை” என அழைத்த உலக மாமேதை கார்ல் மார்க்சுக்குச் சென்னையில் சிலை அமைக்கப்படும் என அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவித்தேன்.
இப்படி, சொல்லாலும், செயலாலும் வரலாற்றுச் சின்னங்களாலும் உழைப்பாளர்களையும் உழைப்பையும் போற்றும் ஆட்சியாகத் தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது. உழைப்பாளர்களின் நலன் காக்கும் நமது முயற்சிகள் தொடரும், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் அதற்கு இந்த மே தினம் மேலும் நமக்கு ஊக்கத்தினை வழங்கட்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post மே தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.