மணலி சின்னமாத்தூரில் குப்பைகளை எரிக்கும் ஆலையை ஆய்வு செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

13 hours ago 2

சென்னையை அடுத்த மணலி சின்னமாத்தூரில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குப்பைகளை எரிக்கும் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. குப்பை எரிக்கும் ஆலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து எந்தவித அனுமதியும் பெறவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், இதுதொடர்பாக தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது. பின்னர், மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், 'இந்த ஆலை கடந்த ஓராண்டாக செயல்படவில்லை. இங்குள்ள பழுதான எந்திரங்களை சீரமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. எந்திரங்களை சீரமைத்த பின்பு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் உரிய அனுமதி பெறப்படும்' என தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசுக்கு மாநகராட்சி நிர்வாகம் பதிலளிக்காதது விசாரணையின்போது தெரியவந்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்த தீர்ப்பாயம், 'சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை மாநகராட்சி அதிகாரிகள் உணரவில்லை' என குற்றம்சாட்டியது. பின்னர் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை ஆய்வு செய்து, அது செயல்படுகிறதா? இல்லையா? என்பதை சரிபார்க்க வேண்டும். குப்பைகளை எரிக்கும் ஆலையை சீரமைப்பது தொடர்பான டெண்டர் இறுதி செய்யப்பட்டு, எப்போது பணிகள் முடிவடையும் என்பதையும், அதற்கான காலக்கெடுவையும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தாக்கல் செய்ய வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டை சம்பந்தப்பட்ட செயலாளர்கள் மூலம் கண்காணிக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு குப்பைகளை எரிக்கும் ஆலை செயல்படவும், இதுதொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article