
புதுடெல்லி,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கத்திற்கு தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.
இந்நிலையில், எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்தமைக்காக, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து உள்ளது. அட்டாரி எல்லையில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி மூடல் மற்றும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிக ரத்து என அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.
பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்குள் பயணிக்க அனுமதி மறுப்பு போன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அவர்களை நாட்டில் இருந்து வெளியேறவும் இந்திய வெளியுறவு செயலகம் உத்தரவிட்டது. இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் அவற்றை இந்தியா மூடியது.
பாகிஸ்தானுடன் அனைத்து வகையான தபால் மற்றும் பார்சல் சேவையை நிறுத்தியுள்ளது. இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சி.ஆர்.பி.எப். வீரரான முனீர் அகமது, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து அதனை மறைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவர் இதனை தெரிந்தே செய்த நிலையில், பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
விசா காலம் முடிந்தும் தெரிந்தே அவரை மறைத்து வைத்திருக்கிறார். அவருடைய செயல்கள், பணிக்கான நடத்தையை மீறும் வகையில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதனுடன் தேச பாதுகாப்புக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளது என சி.ஆர்.பி.எப். வெளியிட்ட அறிக்கை தெரிவித்து உள்ளது.