
புதுடெல்லி,
பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல மறுப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
நரேந்திர மோடி ஜி, மணிப்பூர் உங்கள் வருகைக்காகவும், அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்புவதற்காகவும் காத்திருக்கும் வேளையில், நாங்கள் உங்களிடம் மூன்று முக்கியமான கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம். மணிப்பூரில் உங்கள் கடைசி தேர்தல் பேரணி நடைபெற்ற ஜனவரி 2022 முதல் இன்று வரை, நீங்கள் 44 வெளிநாட்டுப் பயணங்களையும் 250 உள்நாட்டுப் பயணங்களையும் மேற்கொண்டுள்ளீர்கள். ஆனாலும் நீங்கள் மணிப்பூரில் ஒரு நொடி கூட செலவிடவில்லை. மணிப்பூர் மக்கள் மீது ஏன் இந்த அலட்சியமும் புறக்கணிப்பும்? அரசியல் பொறுப்பு எங்கே?இரட்டை எஞ்சின் அரசாங்கம் தனது குடிமக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கான அரசியலமைப்பு கடமையை ஏன் நிறைவேற்றத் தவறிவிட்டது? முதலமைச்சரை ஏன் முன்பே நீக்கவில்லை? இரட்டை எஞ்சின் அரசாங்கம் மணிப்பூரை இன்னும் தோல்வியடையச் செய்து வருகிறது.
உள்துறை அமைச்சகம் தற்போது அங்கு அதிகாரத்தில் இருந்தாலும், வன்முறை சம்பவங்கள் நிற்கவில்லை. உள்துறை அமைச்சர் அறிவித்த அமைதிக் குழுவுக்கு என்ன ஆனது? பாதிக்கப்பட்ட அனைத்து சமூக மக்களையும் டெல்லியில் வைத்து கூட நீங்கள் ஏன் பார்க்கவில்லை? அம்மாநிலத்திற்கு ஏன் ஒரு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்கக்கூடாது? மோடி ஜி, மீண்டும் ஒருமுறை நீங்கள் உங்கள் கடமையை (ராஜதர்மத்தை) நிலைநிறுத்தத் தவறிவிட்டீர்கள்."
இவ்வாறு அதில் கார்கே தெரிவித்துள்ளார்.