திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பள்ளி அறங்காவலர் உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தனியார் பள்ளி அறங்காவலர் வசந்த குமார் (54) பள்ளி வகுப்பறையிலேயே 4ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வசந்த குமாரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் பள்ளி வளாகத்தை அடித்து நொறுக்கினர். அவர்கள் பள்ளிக்குள் புகுந்து அலுவலக அறையின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த காரின் கண்ணாடியையும் உடைத்து நொறுக்கிய தோடு காரை கவிழ்த்தினர்.
அத்துடன் சம்மந்தப்பட்ட பள்ளியின் தாளாளர், நிர்வாகிகள், முதல்வர் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி நொச்சிமேடு என்ற இடத்தில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்புடைய பள்ளி அறங்காவலர் உள்ளிட்ட 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தலைமறைவான பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமி போலீசாரிடம் சரண் அடைந்தார். இதனிடையே சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை மூட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மணப்பாறை தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : பள்ளி அறங்காவலர் உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது appeared first on Dinakaran.