கடத்தூர் : கடத்தூர் அடுத்த வேப்பிலைப்பட்டி பகுதியில் கட்டுமான பணிக்கு தொழிலாளர்களை சரக்கு வாகனத்தில் அழைத்து செல்கின்றனர். தர்மபுரி மாவட்டம் கடத்தூர், சில்லாரஅள்ளி, வேப்பிலைபட்டி, ஒடசல்பட்டி, இராமியணஅள்ளி, தென்கரைக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு விவசாய கூலிவேலை, கட்டுமான தொழிலே பிரதானம் ஆகும். இந்த கிராமங்களில் இருந்து வேலைக்காக அருகில் உள்ள கிராமங்களுக்கும், நகர் பகுதிக்கு செல்ல டவுன் பஸ் வசதிகள் உள்ளது.
குறிப்பாக பெண்களுக்கு இலவச பஸ் வசதி உள்ள போதிலும், அவர்கள் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். காலையில் வேலைக்கு செல்லும் போதும், பணி முடிந்து வீடுகளுக்கு திரும்பி வரும்போதும், சரக்கு வாகனங்களில் பயணிக்கின்றனர்.அறுவடை பணிகளை மேற்கொள்பவர்கள், பயிர்கள், சோள தட்டைகள், கரும்பு, மரவள்ளி ஆகியவற்றின் மீது அமர்ந்தும், கட்டுமான பணிக்கு செல்பவர்கள் சிமெண்ட் மூட்டை, செங்கல், மணல் மீது அமர்ந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நகர் பகுதிக்கு கட்டுமான பணிக்கு செல்பவர்களும் இவ்வாறாக செல்கின்றனர். சரக்கு வாகனத்தில் செல்வதால் விபத்தில் சிக்கும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இதுபோன்று சரக்கு வாகனங்களில் பொதுமக்களை அழைத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கடத்தூரில் சரக்கு வாகனங்களில் அமர்ந்து செல்லும் கட்டிட தொழிலாளர்கள் appeared first on Dinakaran.