* 500 ஏக்கருக்கு நீராதாரமாக விளங்கியது
* 7 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்
ஆறுமுகநேரி : மடைகள் சேதமடைந்து செடி, கொடிகள் ஆக்கிரமிப்பால் தூர்ந்து போன சுகந்தலை குட்டத்தை பாதுகாக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 500 ஏக்கருக்கு நீராதாரமாக விளங்கிய குட்டத்தில் தண்ணீரை தேக்க முடியாததால் 7 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலாத்தூர் அருகே உள்ளது, சுகந்தலை. இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீராதாரமாக சுகந்தலை குட்டம் உள்ளது. கடம்பாகுளம் 9ம் மடை தென்திருப்பேரையில் இருந்து வாய்க்கால் வழியாக குட்டத்திற்கு தண்ணீர் வருகிறது. தாமிரபரணி ஆற்றின் தென்கால், ஆத்தூரான் வாய்க்கால் வழியாகவும் சுகந்தலை குட்டத்திற்கு தண்ணீர் வந்தது. கடந்த 80 ஆண்டுகளில் கோடையில் ஒரு முறை மட்டுமே சுகந்தலை குட்டம் வற்றியதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த குட்டத்தில் இருந்து 5 மடைகள் மூலம் விவசாயத்திற்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
சுகந்தலை மற்றும் வெள்ளக்கோவில் உட்பட சுற்றுவட்டாரத்தில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் நெல், வாழை மற்றும் வெற்றிலை கொடிக்கால்கள் பயிரிடப்பட்டு வந்தது. ஆண்டுக்கு நெல் விவசாயம் 2 பூ விளைச்சல் நடைபெற்று வந்தது. இதன் முலம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சுகந்தலை குட்டத்தின் மடைகள் சேதமடைந்தும், நிலப்பரப்பு இறங்கி நிலத்திற்குள் மூழ்கியும் உள்ளது. இதனால் சுகந்தலை குட்டத்திற்கு வரும் தண்ணீரை சேமிக்க முடியாமல் நேரடியாக வாய்க்கால் வழியாக கடலுக்கு செல்வதால் சுற்றுவட்டார விவசாயிகள் விவசாயத்திற்கு நீரினை பயன்படுத்த முடியாமல் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை வெள்ளத்தில் சேதமடைந்த மடைகள் மேலும் சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இப்பகுதி மக்கள் தினக் கூலி வேலைக்கும், கட்டிட தொழிலுக்கும் சென்று வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சுகந்தலை குட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சிதிலமடைந்த மடைகளை சீரமைத்து செடி, கொடிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குட்டத்தை தூர்வார நடவடிக்கை எடுத்து தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
சுகந்தலை குட்டத்தின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள், கடம்பா குளம் 9ம் மடையில் இருந்து குட்டத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்காலை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மனுக்கள் கொடுத்தும் பயனில்லை
சுகந்தலை, வெள்ளக்கோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் சார்பில் சுகந்தலை குட்டத்தை சீரமைக்கவும், சேதமடைந்த மடைகளை சரி செய்யவும் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரியிடம் மனுக்கள் அளித்தும் எந்த பயனும் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆத்தூரான் கால் வாய்க்கால் ஓட்டை மடை மீண்டும் திறப்பு?
சுகந்தலை குட்டத்திற்கு ஆத்தூரான் கால் வாய்க்கால் ஓட்டை மடை வழியாக தண்ணீர் வந்தது. கடந்தாண்டு பெய்த கனமழை வெள்ளத்தால் ஆத்தூரான் வாய்க்கால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. இதனை தற்போது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சீரமைப்பு பணியின்போது குட்டத்திற்கு தண்ணீர் செல்லும் ஓட்டை மடை முழுவதும் அடைக்கப்பட்டு உள்ளது. எனவே ஆத்தூரான் வாய்க்காலில் இருந்து சுகந்தலை குட்டத்திற்கு தண்ணீர் வரும் பாதையை திறந்து தண்ணீர் வரும் வாய்க்காலையும் சீரமைக்க வேண்டும்.
வீணாகும் தண்ணீரால் வெற்றிலை பாதிப்பு
ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாய சங்கத் தலைவரும், மேலாத்தூர் பஞ். தலைவருமான சதீஷ்குமார் கூறுகையில், 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஏதுவாக சுகந்தலை குட்டத்தை தூர்வாரி, மடைகளை சீரமைத்து, வாய்க்கால்களை அகலப்படுத்த பொதுப்பணித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வெற்றிலை பயிர்களுக்கு தேவையான நேரங்களில் தண்ணீர் கிடைக்காமல், தேவையில்லாத நேரங்களில் மடைகள் உடைப்பு முலம் தண்ணீர் வீணாக சென்று பயிர்கள் நாசமாகிறது.
தற்போது தண்ணீரை சேமிக்க வழியில்லாததால் நேரடியாக கடலுக்குச் செல்கிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையில் வெற்றிலை கொடிக்கால்கள் அனைத்தும் தண்ணீரில் அழுகி நாசமானது. தற்போது இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வெற்றிலை கொடடிக்கால்களில் வீணாகச் செல்லும் தண்ணீர் தேங்கியும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது, என்றார்.
‘‘வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்”
வெள்ளகோயில் ஊர் தலைவர் கோட்டாளமுத்து கூறுகையில், எனக்குத் தெரிந்து 3 தலைமுறைக்கு மேலாக சுகந்தலை, வெள்ளக்கோவில் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள், சுகந்தலை குட்டத்தின் நீராதாரத்தை உள்ளன. இதன் மூலம் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் விவசாயம் நடந்து வந்தது.
கடந்த 7 வருடங்களுக்கு முன்பு மடைகள் சேதமடைந்ததில் இருந்து தற்போது வரை விவசாயம் நடைபெறாமல் தரிசு நிலமாக மாறியுள்ளது. இதனால் இப்பகுதி விவசாய குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கூலி தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு தேவையான வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும், என்றார்.
The post மடைகள் சேதமடைந்து செடி, கொடிகள் ஆக்கிரமிப்பால் தூர்ந்து போன சுகந்தலை குட்டம் பாதுகாக்கப்படுமா? appeared first on Dinakaran.