மடப்புரம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு: 3-வது நாளாக நீதிபதி ஜான்சுந்தர் லால் விசாரணை

4 hours ago 3

சிவகங்கை: மடப்புரம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் மருத்துவர், ஆட்டோ ஓட்டுநரிடம் நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இதுதொடர்பாக மானாமதுரை குற்றவியல் தனிப்படை போலீசார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உயிரிழந்த அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் இச்சம்பவம் கொலை வழக்காக மாற்றப்பட்டது.

பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே இந்த வழக்கை மதுரை மாவட்ட 4-வது கோர்ட்டின் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேற்றுமுன்தினம் திருப்புவனம் வந்து விசாரணையை தொடங்கினார். முதல்நாளில், திருப்புவனம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகளிடமும், கோவில் பணியாளரும், அஜித்குமார் தாக்கப்பட்ட காட்சிகளை வீடியோ பதிவு செய்தவருமான சக்தீஸ்வரன், அலுவலக உதவியாளர், கோவில் பணியாளர்கள், ஆட்டோ டிரைவர் உள்ளிட்டோரிடம் காலை முதல் இரவு வரை தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

மேலும் அவர்கள் அளித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. 2-வது நாளாக நேற்றும் திருப்புவனம் போலீஸ் நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணையை நடத்தினார். இந்நிலையில் இன்று மடப்புரம் கோயில் ஊழியர் அஜித்குமார் மரண வழக்கில் 3வது நாளாக நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். அஜித்குமார் மரண வழக்கில் மருத்துவர், ஆட்டோ ஓட்டுநரிடம் நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயனிடம், நீதிபதி ஜான்சுந்தர் லால் விசாரணை நடத்தி வருகிறார்.

The post மடப்புரம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு: 3-வது நாளாக நீதிபதி ஜான்சுந்தர் லால் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article